சுறுசுறுப்பான ரஜினி மக்கள் மன்றம்... களையெடுப்பு ஆரம்பம்.. உருவாகிறது புதிய நிர்வாகிகள் பட்டியல்..!

By Selva KathirFirst Published Dec 5, 2020, 12:12 PM IST
Highlights

புதிய நிர்வாகிகள் பட்டியலை ரஜினியே தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது மாவட்டத்திற்கு ஒரு தலைவர், செயலாளர் பதவி மக்கள் மன்றத்தில் உள்ளது. திமுக, அதிமுக பாணியில் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக இரண்டு அல்லது மூன்றாக பிரித்து புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார். 

ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ள நிலையில் நிர்வாகிகளை களையெடுக்கும் பணியில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனை அடுத்து ரஜினியின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து ரஜினி பேசினார். மேலும் மாவட்டம் தொடங்கி கிராம ஊராட்சிகள் வரை ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு மகளிர் அணி, வழக்கறிஞர்அணி என பல்வேறு சார்பு அமைப்புகளும் ரசிகர் மன்றத்தில் உருவானது.

மேலும் பூத் கமிட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்க வேண்டும் என்று மக்கள் மன்ற மேலிடம் உத்தரவிட்டது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பூத் கமிட்டி அமைத்ததோடு புதிதாக உறுப்பினர் சேர்கையிலும் ஆர்வம் காட்டினர். இடை இடையே மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கையை ரஜினி மேற்பார்வை செய்தார். மேலும் செயல்பாட்டில் இல்லாத நிர்வாகிகளை ரஜினியே அப்போது அழைத்து உற்சாகப்படுத்தினார். அப்படியும் செயல்படாத நிர்வாகிகள் மாற்றப்பட்டனர்.

ஆனால் கடந்த ஆண்டு இறுதி முதல் மக்கள் மன்ற பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனால் மக்கள் மன்ற நிர்வாகிகளும் சோர்ந்து போயினர். உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி போன்ற பணிகளும் கிடப்பில் போடப்பட்டன. மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மத்தியில் எழுச்சி வந்த பிறகு தான் அரசியலுக்கு வருவதாக கூறியிருந்தார்.

ஆனால் இதனை சில நிர்வாகிகள் நம்பவில்லை. எனவே அவர்கள் வழக்கம் போல் மக்கள் மன்ற பணிகளில் கவனத்தை செலுத்தாமல் தங்கள் தொழிலை பார்க்கச் சென்றனர். அதே சமயம் ரஜினி மீது நம்பிக்கையோடு சில மாவட்ட தலைவர்கள் தொடர்ந்து மக்கள் மன்ற பணிகளில் தீவிரம் காட்டினர். ரஜினி கூறிய எழுச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சில இடங்களில் பிரச்சாரமும் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் ஆங்காங்கே சில மாவட்டங்களில் நிர்வாகிகள் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் தான் அரசியல் வருகையை ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதே சமயம் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போது சில நிர்வாகிகள் மீது ரஜினி அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனை ஒட்டி தற்போயை மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிராம ஊராட்சி செயலாளர்கள் வரை அவர்களின் பணிகளை மறுபடியும் மக்கள் மன்ற மேலிட நிர்வாகிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர். பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாத நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளுமாற தலைமை கோரி வருவதாக சொல்கிறார்கள்.

இதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ரஜினியே தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது மாவட்டத்திற்கு ஒரு தலைவர், செயலாளர் பதவி மக்கள் மன்றத்தில் உள்ளது. திமுக, அதிமுக பாணியில் மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக இரண்டு அல்லது மூன்றாக பிரித்து புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ரஜினி முடிவெடுத்துள்ளார். இதே போல் ரஜினி தனது கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

பொதுச் செயலாளர் பதவிக்கு மிகவும் நம்பகமான ஒருவரை ரஜினி தேடி வருகிறார். அனேகமாக ரஜினி தனது நெருங்கிய நண்பரான ஒருவரை அந்த பதவியில் நியமிப்பார் என்கிறார்கள். அதே சமயம் பொருளாளர் பதவிக்கு தகுந்த நபரையும் ரஜினி ஆலோசித்து வருவதாகவும், தற்போது புதிய நீதிக்கட்சி என்கிற பெயரில் செயல்பட்டு வரும் ஏசி சண்முகத்தின் மகனுக்கு பொருளாளர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

click me!