ராஜஸ்தானில் மத்திய அமைச்சர் மீது பாய்ந்தது வழக்குப்பதிவு... ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றச்சாட்டு!!

By Asianet TamilFirst Published Jul 19, 2020, 9:31 AM IST
Highlights

ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் ஷெகாவத் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் கடந்த 2018 டிசம்பர் முதல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் இருந்துவருகிறார்கள். இந்நிலையில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க சச்சின் பைலட் தலைமையில் 19 எம்.எல்.ஏ.க்கள் அணி சேர்ந்தனர். ஆனால், இதன் பின்னணியில் பாஜக இருந்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது.


இந்த விவகாரம் தீவிரமானதால் மாநில  துணை முதல்வர் பதவியிலிருந்தும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 2 அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. மேலும் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. ராஜஸ்தானில் அரசியல் விவகாரம் சூடாகிவரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஷெகாவத், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரிலால்வுடன் பேசிய ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்கும் உரையாடலும் இடம் பெற்றிருந்தன.
இதனால், ராஜஸ்தானில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. சச்சின் பைலட் பின்னணியில் பாஜக செயல்படுவது வெளிச்சமாகியுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது அல்ல என்று மத்திய அமைச்சர் ஷெகாவத் மறுத்துள்ளார். இதனிடையே அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் ஷெகாவத் மீது ராஜஸ்தான் போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
கொரோனா நோய்த் தொற்று நேரத்தில் ராஜஸ்தானில் அரசியல் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே ராஜஸ்தானில் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
 

click me!