
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன.
நவீன வசதிகளுடன் கூடிய பங்களா மற்றும் இந்த பண்ணையில் மன்னார்குடியைச்சேர்ந்த 4 தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர் பத்திரரிக்கை, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ,இவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதே போன்று பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொடக்கத்தில் 3 ஆதிகாரிகளும் பின்னர் 4 அதிகாரிகள் என மொத்தம் 7 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது பண்ணை வீட்டின் ஒரு பகுதியில் கீழ் தளத்தில் இரண்டு பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த பாதாள அறைகளின் கதவுகளில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ‘எலக்ட்ரானிக்ஸ் லாக்’ பொருத்தப்பட்டு இருந்தது. அதை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.
பாதாள அறை கதவுகளின் பூட்டுகளை பாஸ்வேர்டு பயன்படுத்தி மட்டுமே திறக்க முடியும் என்பதால் அதிகாரிகளால் முடியவில்லை. அவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்ட பின்னர் மாலையில் அந்த பாதாள அறைகளின் கதவுகள் திறக்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த அறைகளிலும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு ஏராளமான ஆவணங்கள் பதுக்கி வைத்து இருந்ததாகவும் அவற்றை வருமானவரி துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
நேற்று காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை சுமார் 14½ மணி நேரம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.