
2018-2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலைக் கருத்தில் கொள்ளாமல், நாட்டின் நலன் கருதியே இந்த பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்களும் சில பொருளாதார நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவில், 50% லாபம் வைத்து 1.5 மடங்காக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும், ஆபரேஷன் கிரீனுக்கு 500 கோடி ஒதுக்கப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றன. மேலும் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டையும் அறிவிப்புகளையும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டுவிட்டரில் விமர்சித்துள்ள ராகுல், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இன்னும் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படும் என்று உறுதி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்படுகிறது. கவர்ச்சித் திட்டங்கள் தான் அறிவிக்கப்படுகின்றனவே தவிர அதற்கான போதுமான நிதி ஒதுக்குவதில்ல. வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.