
ரூபாய் நோட்டு தடை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இந்திய பொருளாதாரம் மிக மோசமான பாதிப்பை அடைந்திருப்பதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தார்.
30 இடங்கள் முன்னேற்றம்
தொழில் தொடங்குதல் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் தொடர்பாக உலக வங்கி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில்,மொத்தம் 190 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 130-வது இடத்தில் இருந்த இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.
வர்த்தகத்தில் எளிமை
இதுபோலவே, புதிதாக தொழில் தொடங்குவது மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தையும் இந்தியா எளிமைப்படுத்தி வருவதாக உலக வங்கி கூறியுள்ளது.
இந்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறி இருந்தார்.
மோசமான பாதிப்பு
உலக வங்கியின் இந்த ஆய்வறிக்கை பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘‘இந்தியாவில் எளிதாக தொழில் செய்யும் வாய்ப்பு இல்லை, ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி நமது பொருளாதாரத்தை மிக மோசமாக பாதித்துள்ளது.
உண்மைத்தன்மை
உலக வங்கியின் அறிக்கையால் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால் இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதன் உண்மைத்தன்மை மக்களுக்கு நன்றாகவே தெரியும்'' எனக் கூறியுள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சர் டாக்டர் அருண் ஜெட்லி தரும் மருந்துகள் எதுவும் பயனளிக்கவில்லை என ராகுல் காந்தி சமீபத்தில் கிண்டலாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் பொதுக்கூட்டம்
தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். தெற்கு குஜராத்தில் நேற்று நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலும், ‘‘இந்தியாவில் வர்த்தகம் செய்வது எளிதானது அல்ல’’ என்று, மோடி அரசுக்கு எதிரான தனது தாக்குதலை தொடர்ந்தார்.
அவர் கூறியதாவது-
சிறிய வியாபாரிகள்
‘‘கருப்பு பண விவகாரத்தில் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது.
பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் ஜெட்லியும் தோல்வி அடைந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.
வர்த்தகம் எளிதாக நடைபெறுகிறது என்ற கூறும் அருண் ஜெட்லி, சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினால், அவருடைய கூற்று உண்மையல்ல என்று தெரிந்துவிடும்.
தங்கத்தில் கருப்பு பணம்
ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்டது நேர்மையான சிறு வியாபாரிகள், விவசாயிகள்தான். அவர்களிடம் கருப்புப் பணம் இல்லை.
கருப்புப் பணத்தின் பெரும்பகுதி தங்கத்தின் வடிவிலோ, நிலத்திலோ அல்லது சுவிஸ் வங்கிகளிலோ முதலீடு செய்யப்பட்டு இருப்பதை புரிந்து கொள்ள பிரதமர் தவறிவிட்டார்.
சிறையில் எத்தனை பேர்?
தற்போது 3 ஆண்டுகள் பதவி வகித்த பா.ஜனதா அரசு வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கிய எத்தனை பேரை மோடி சிறைக்கு அனுப்பினார் என்று கூற முடியுமா?
ரூபாய் நோட்டு தடையால் நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியை 2 சதவீதமாக வீழ்ச்சி அடைய வைத்துவிட்டது’’.
இவ்வாறு ராகுல் கூறினார்.
அருண் ஜெட்லி பதிலடி
மத்திய அரசுக்கு எதிராக ராகுல் தாக்குதல் தொடுத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பதிவில் பதிலடி கொடுத்தார்.
அதில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஊழல் மலிந்திருந்ததாகவும், தற்போது பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் வர்த்தகம் எளிதாக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.