அதிமுக எம்.எல்.ஏ.க்கு சிக்கல்... நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்து போன முதல்வர் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Oct 1, 2019, 3:48 PM IST
Highlights

ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் அப்பாவு, அ.தி.மு.க. சார்பில், இன்பதுரை போட்டியிட்டனர். இன்பதுரை 69,596 ஓட்டுகளும், அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இதில், 49 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீ்ர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அப்போது மனுதாரர் அப்பாவு கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 4-ம் தேதி தபால் வாக்குகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்று எந்திரத்தில் பதிவான வாக்குகளை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!