'பேக்' அடிக்கும் புகழேந்தி! சசி குடும்பத்துடன் கட்சி உறவைத் தவிர வேறு உறவு இல்லை?

First Published Nov 13, 2017, 12:27 PM IST
Highlights
Pugalendi Explanation


கட்சி அடிப்படையிலான உறவைத் தவிர மன்னார்குடி குடும்பத்துடன் தனிப்பட்ட அல்லது வியாபார ரீதியிலான தொடர்பு இல்லை என்று கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பெங்களூர் புகழேந்தி, தங்கதமிழ்செல்வன் ஆகியோரின் வீடுகளிலும், வருமான வரி சோதனை நடைபெற்றது. கர்நாடக அதிமுக கட்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை குறித்து, புகழேந்தி, வாரப்பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். கடந்த 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது குறித்து வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். என்னுடைய பெரிய சொத்து 1100 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் என் வீடுதான். வீட்டில் இரண்டு குடியிருப்புகளை வாடகைக்கு விட்டுள்ளேன். நான், மனைவி, 2 மகன்கள், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறேன். என் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கு நான் என்ன அமைச்சரா? அல்லது எம்.பி.யா? என்று கேள்வி
எழுப்பினார்.

அதிமுக கட்சி அடிப்படையிலான உறவைத் தவிர மன்னார்குடி குடும்பத்துடன் தனிப்பட்ட அல்லது வியாபார ரீதியிலான தொடர்பு கிடையாது. சசிகலா, தினகரனைக் கடந்து அந்த குடும்பத்தில் எவருடனும் எனக்கு தொடர்பில்லை. தினகரனைத் தவிர அவர்கள் யார் வீட்டுக்கும் நான் சென்றதில்லை. திவாகரனுக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டபோதுகூட எனது தலைவர் தினகரன்தான் என்று கூறியிருந்தேன்.

எனக்கும் ஜாஸ் சினிமாசுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை. என் வீட்டில் சோதனை நடந்தபோது, குடும்ப செலவுக்காக 30 ஆயிரம் ரூபாயைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. கர்நாடக அதிமுக அலுவலகத்தில் சோதனையின்போது அங்கு எதுவுமே கிடைக்காததால் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். திவாகரனை பாஸ் என்றவர்கள் தற்போது அமைச்சர்கள், அவர்கள் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தப்படவில்லை? ரெய்டில் ஏன் இத்தனை பாராபட்சம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜகவையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக என் வீட்டில் சோதனை செய்தார்கள் என்றால், ஜனநாயக குரல் வளையை நெரிப்பதற்கு சமமானது என்று புகழேந்தி காட்டமாக கூறியிருந்தார்.

கடந்த 9 ஆம் தேதி புகழேந்தி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி புகழேந்திக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்த புகழேந்தி, அதிகாரிகளிடம் விளக்கமளித்து வருகிறார்.

click me!