சிஏஏ-க்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம்... நாராயணசாமிக்கு அதிரடியாக தடை போட்ட கிரண்பேடி!

By Asianet TamilFirst Published Feb 11, 2020, 10:13 AM IST
Highlights

மத்திய அரசின் யூனியன் பிரதேச சட்டப்படி சட்டப்பேரவை அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. இது தொடர்பாக சில விவரங்களை கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை அரசாணையாகவும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், புதுச்சேரிக்கும் பொருந்தும்.

புதுச்சேரி சட்டப்பேரவை விதிகளின்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் நீதிமன்றத்தில் கீழ் இருக்கும் விஷயத்தை தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க முடியாது என்று முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

 
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றன. கேரளா, மேற்குவங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இதன் அடிப்படையில் சிஏஏவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதுதொடர்பாக  துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முறையிட்டனர். இதனையத்து கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
 மேலும் அந்தக் கடிதத்தில், “மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்எல்ஏக்கள் என்னை சந்தித்து மனு அளித்தனர். அதில் 12ம் தேதி சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தனர். இது மத்திய அரசின் யூனியன் பிரதேச சட்டப்படி சட்டப்பேரவை அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல. இது தொடர்பாக சில விவரங்களை கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை அரசாணையாகவும் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், புதுச்சேரிக்கும் பொருந்தும்.
 இதை யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு அடிப்படையிலேயே கேள்வி எழுப்ப முடியாது. சட்டப்பேரவையின் அதிகார அடிப்படையில் சிஏஏ-வுக்கு எதிராக விவாதம் நடத்துவது நாடாளுமன்றத்துக்கு எதிரானது.ஏற்கனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை விதிகளின்படி, நாட்டின் எப்பகுதியிலும் உள்ள நீதிமன்றத்தில் கீழ் இருக்கும் விஷயத்தை தீர்மானமாகவோ, விவாதிக்கவோ அனுமதிக்க முடியாது என்று உள்ளது. எனவே இதன்மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

click me!