6மாநிலங்களில் சொத்து அட்டை வழங்கும் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ..!!

By T BalamurukanFirst Published Oct 10, 2020, 8:46 AM IST
Highlights

2020 அக்டோபர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6 மாநிலங்களில் விவசாயிகளுக்கு அவர்கள் சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிடும் அட்டையினை வழங்கும் திட்டத்தினை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்க இருக்கிறார்.
 

அக்டோபர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 6 மாநிலங்களில் விவசாயிகளுக்கு அவர்கள் சொத்து பற்றிய விவரங்களை குறிப்பிடும் அட்டையினை வழங்கும் திட்டத்தினை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்க இருக்கிறார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 346 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும்,ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 277 கிராம  விவசாயிகளுக்கும்,மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும்,மத்திய பிரதேசத்தில் உள்ள 44 கிராம விவசாயிகளுக்கும்,உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 50 கிராம விவசாயிகளுக்கும்,கர்நாடக மாநிலத்தில் 2 கிராம விவசாயிகளுக்கும் சொத்து அட்டையினை வழங்கும் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

இந்த 6 மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சொத்து அட்டை கிடைப்பதற்கு 1 மாத காலம் ஆகும். மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் சொத்து அட்டை கிடைக்கும்.மகாராஷ்டிரா மாநிலத்தில் சொத்து அட்டை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன் காரணமாக 1 மாத காலம் தாமதமாகும் என்று பிரதமரின் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டையில் குறிப்பிடப்படும் சொத்துக்களை பயன்படுத்தி கடன் பெறுவதற்கு இந்த அட்டை உதவும். அதேபோல இந்த அட்டையை வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இந்த சொத்து அட்டை வழங்கும் திட்டத்தைத் துவக்குகிறது.

பிரதமர் இத்திட்டத்தை அக்டோபர் 11ம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்.கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தன்று கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு தங்களுக்கு உரிமையான  சொத்துக்களின் விவரத்தை குறிப்பிடும் சொத்து அட்டை வழங்கும் முறையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமை பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக அவை வழங்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் வசிப்போருக்கு இருந்த சொத்து அட்டைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்தை அமல் செய்ய இடையீடு இல்லாத கணினி இயக்கத்துக்கு மாநில அரசுகள் வகை செய்ய வேண்டும். அத்துடன் ஆளில்லா விமானங்களின் மூலமாக கிராமப் பகுதிகளில் உள்ள சொத்துக்களை பற்றிய விபரம் தொடர்ந்து கணினிக்கு அனுப்பப்படும். அவை பதிவு செய்யப்பட்டு சொத்து அட்டைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு மாநிலமும் சொத்து அட்டைக்கு ஒவ்வொரு பேரை தங்கள் மொழியில் வைத்துள்ளனர்.சொத்து அட்டை பற்றிய விவரங்களை இறுதி செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஸ்வம்மித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமல் செய்யப்படுகிறது

click me!