
திருச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக , வேட்பாளராக, அக்கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் களமிறங்கியுள்ளார். இவர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க., கூட்டணியில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட, இவர் விரும்பினார்.
ஆனால் பா.ம.க.,விற்கு, அத்தொகுதி வழங்கப்பட்டு விட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமையிடம், இளங்கோவன் விருப்பம் தெரிவித்தார். இத்தொகுதியை தர, அ.தி.மு.க., மறுத்து விட்டது.
இதனால், போட்டியிடாமல் ஒதுங்க, இளங்கோவன் முடிவு செய்தார்.அவரை கட்டாயமாக, திருச்சியில் போட்டியிடுமாறு, விஜயகாந்தும், பிரேமலதாவும் நிர்ப்பந்தம் செய்தனர். தேர்தல் செலவுகளை, திருச்சி மாவட்ட அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, புதுக்கோட்டை மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்துக் கொள்வர் என, இருவரும் உறுதியளித்தனர்.
மூன்று அமைச்சர்கள் பலம் இருப்பதால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என, இளங்கோவன் நம்பினார். தற்போது, பணம் இல்லாமல், அவர் திண்டாடி வருகிறார். விஜயகாந்தை தொடர்பு கொண்டு, தன் நிலை குறித்து, அவர் புலம்பி தள்ளினார்.
இதையடுத்து, தேர்தல் செலவிற்கு ஏற்பாடு செய்வதாக, விஜயகாந்த் உறுதியளித்தார். முதற்கட்டமாக, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என, அவரிடம் கூறப்பட்டது. இதனால், மிகுந்த நம்பிக்கையில், இளங்கோவன் இருந்தார். ஆனால், கைக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், திருச்சியில், பிரேமலதா பிரசாரம் செய்ய வந்தார். அவரிடம் பணம் கேட்டு, வேட்பாளர் இளங்கோவன் நச்சரித்து உள்ளார். 'ஒரு பைசா கூட தர முடியாது; கட்சி தலைமையிடம் பணம் இல்லை' என, பிரேமலதா கைவிரித்து உள்ளார்.உங்களை நம்பி தான், நான் வேட்பாளரானேன்; வயதில் மூத்த, என்னை ஏமாற்றலாமா?' என்று, பிரேமலதாவிடம், நேருக்கு நேர், இளங்கோவன் வாக்குவாதம் செய்துள்ளார்.
மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளும், வேட்பாளரின் நிலைமையை விளக்கியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத பிரேமலதா, கடும் கோபம் அடைந்துள்ளார். வழக்கமாக, பிரேமலதா வாகனத்தில் நின்றபடி, பிரசாரம் செய்வார்.
ஆனால் .வேட்பாளர் மற்றும் மாவட்ட செயலர்கள் மீது கோபத்தை காட்டுவதற்காக, இருக்கையில் அமர்ந்து பேசியுள்ளார். எழுந்து நின்று பேசும்படி, கட்சியினர் கேட்டும், காதில் வாங்க, பிரேமலதா மறுத்து விட்டார். இதுமட்டுமின்றி, கட்சியினர் எடுத்து வந்திருந்த, ரோஜா மாலையையும், ஏற்க மறுத்து விட்டார்.