பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.. காவல்துறைக்கு எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published May 10, 2021, 11:19 AM IST
Highlights

வாகன தணிக்கை செய்யும் போது அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை தேவையின்றி நிறுத்தாமல் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக தனி பாதை அமைத்து தணிக்கை செய்ய வேண்டும்,

முழு ஊரடங்கின்போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அறிவுரைகள் அடங்கிய தொகுப்பு சென்னை பெருநகர காவல் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், தற்காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத பட்சத்தில் தடியடி அல்லது பலப்பிரயோகம் உபயோகிப்பது  எந்தச் சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது, அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபடவேண்டும். கிருமிநாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது, குறிப்பாக இடைவெளியில் சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்ளவேண்டும். ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும். மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், இதர உபகரணங்கள் ஆகியவை வாகன தடையின்றி எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். 

முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தவேண்டும். மேலும் சென்னை நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து பெறப்பட்ட தகவல்களை பகிர வேண்டும். வியாபாரிகளின் பிரதிநிதிகளோடு சரக உதவி ஆணையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதித்தல், 12:00 மணிக்கு கடைகளை அடைத்தல், காவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்க அறிவுறுத்த வேண்டும். வீடியோ மற்றும் நவீன முறையில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடற்கரை உள்ளிட்ட நீண்ட நிலப்பரப்புகளை ட்ரோன் கேமரா மூலம் பயனுள்ள வகையில் கண்காணிக்கலாம். ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்ல சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும். 

வாகன தணிக்கை செய்யும் போது அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை தேவையின்றி நிறுத்தாமல் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக தனி பாதை அமைத்து தணிக்கை செய்ய வேண்டும், வாகன தணிக்கை செய்யும் காவலர்களுக்கு முகக்கவசம், முக தடுப்பு கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கவேண்டும். வாகன தணிக்கை பணியில் ஈடுபடும் காவலர்கள் முக கவசம் அணிந்து கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். சென்னை பெருநகர, அனைத்து காவல்துறை உயரதிகாரிகள் தங்கள் எல்லைகளில் சுற்றுக்காவல் பணியை தேவைக்கு ஏற்ப செய்து, எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்படி காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு, காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

click me!