ஸ்டாலின் நிழல்தேடி ஒதுங்கும் பாமக.. கோ.க. மணியை தூது அனுப்பிய ராமதாஸ்..??

By Ezhilarasan BabuFirst Published May 11, 2021, 4:02 PM IST
Highlights

மு.க ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்று இருக்கிற அரசுக்கு எங்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறோம் .தமிழகத்தின் மேம்பாட்டுக்காக பாமக ஆக்கப்பூர்வமாக செயல்படும், என்றென்றும் மருத்துவர் ராமதாசின் அறிவுறுத்தல்களை சட்டமன்றத்தில் முன்வைப்போம்,

தமிழக சட்டபேரவை தேர்தலில் பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக பாமக தலைவரும், பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே மணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் 16வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். ஏற்கனவே கோரோனா பெருந்தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத் தொடர்கள் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்றது. அந்த வகையில் முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல் ஆளாக சட்டமன்ற உறுப்பினராக பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினருகளும்  சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க எனவே தற்காலிக சபாநாயகராக திமுகவைச் சேர்ந்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். 

இந்நிலையில் பாமக சார்பில் வெற்றிபெற்றுள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்கள்  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக் கொண்டனர். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியின் பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பாமக தலைவருமான ஜி.கே மணி  வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக சார்பில் தேர்வு செய்ய பட்டிருக்கிறது ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று கொண்டுள்ளோம். ஐந்து என்பது குறைவு தான். இருந்தாலும் எங்களுக்கு வாய்ப்பளித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி. எதிர்பார்த்த அளவுக்கு எங்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை, அதனால் அதிக இடங்களில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. 

மு.க ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்று இருக்கிற அரசுக்கு எங்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறோம். தமிழகத்தின் மேம்பாட்டுக்காக பாமக ஆக்கப்பூர்வமாக செயல்படும், என்றென்றும் மருத்துவர் ராமதாசின் அறிவுறுத்தல்களை சட்டமன்றத்தில் முன்வைப்போம், திமுக தலைமையிலான புதிய அரசின் 5 அறிவிப்புகள் வரவேற்கதக்கது.  மக்களுக்கான திட்டங்களை பாமக வரவேற்கும். 10.5% இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இனி வரும் காலத்தில் ஆளும் திமுக அரசு அனைத்து சமூகத்துக்கும் இடஒதுக்கீடு பிரித்து அளிக்க வேண்டும் என்பதே பாமகவின் கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார். தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்கள் திமுகவின் வெற்றிக்குப் பின், ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்களை பாராட்டி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.  இன்று பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறைக்கே சென்று வலிய வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

 

click me!