திமுக கூட்டணியில் பாமக இன்..! விசிக அவுட்..! பரபரக்கும் அரசியல் களம்...!

By Selva KathirFirst Published Jan 18, 2021, 10:51 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி சரியாக இருக்காது என்கிற முடிவிற்கு பாமக மேலிடம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சட்டமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி சரியாக இருக்காது என்கிற முடிவிற்கு பாமக மேலிடம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான தொகுதிகளை வென்றால் போது மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் சேர்ந்து கொள்ளலாம் என்று ராமதாஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தது. அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் கூட பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்கிற அடிப்படையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

ஆனால் தருமபுரியில் அன்புமணி தோல்வி அடைந்தார். இதன் பிறகு அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆனாலும் கூட மத்திய அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பாஜகவிடம் இருந்து பாமக விலக ஆரம்பித்தது. ஆனால் இடைத்தேர்தல்களில்  அதிமுக வேட்பாளர்களை பாமக ஆதரித்தது. அந்த தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இருந்தாலும் கூட சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ் கூட்டணி விவகாரத்தில் மிகுந்த பொறுமை காத்து வருகிறார். அதிமுக பலமுறை இறங்கிச் சென்றும் அ ந்த கட்சியுடன் கூட்டணி சேர ராமதாஸ் ஆர்வம் காட்டவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு எனும் உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீத இடஒதுக்கீடு என்பது தேர்தல் நேரத்தில் சரியாக இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருக்கிறார். இதனால் இரண்டு முறை நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் சாதகமான எந்த முடிவும் ஏற்படவில்லை. சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது எடப்பாடியின் மிகப்பெரிய விருப்பம்.

இதற்காக தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக்கூடத் தயார். அதே போல் பாமகவின் தேர்தல் செலவுகளையும் கவனித்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி ரெடியாகவே உள்ளார் என்கிறார்கள். ஆனால் ராமதாஸ் தான் பிடிகொடுக்க மறுக்கிறார் என்று பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு காரணம் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்கிற ராமதாஸின் யோசனை தான் என்று சொல்கிறார்கள். கடந்த 2009 தேர்தல் தொடங்கி தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் பாமக தோல்வி அடைந்தே வருகிறது.

எனவே பாமகவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் இந்த தேர்தலில் வென்று கணிசமான எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். அதே சமயம் கூட்டணி அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும். எனவே அதற்கு ஏற்ப தேர்தல் வியூகத்தை ராமதாஸ் வகுப்பதாக சொல்கிறார்கள். அதிமுக ஏற்கனவே பத்துவருடங்களாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சி. எடப்பாடி பழனிசாமி கடந்த 4 வருடங்களாக மட்டுமே முதலமைச்சராக உள்ளார். இருந்தாலும் அதிமுக அரசு மீதான அதிருப்தி திமுகவிற்கு வெற்றியை தேடித் தரும் என்று ராமதாஸ் கருதுவதாக சொல்கிறார்கள்.

மேலும் அண்மையில் அன்புமணி ராமதாஸ் ரகசியமாக எடுத்த கருத்துக்கணிப்புகளில் வட மாவட்டங்களில் மட்டும் அல்ல அனைத்து மாவட்டங்களிலும் திமுகவிற்கு நல்ல ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. திமுகவா? அதிமுகா? என்கிற கேள்விக்கு பெரும்பாலும் திமுகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றே கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பலரும் பதில் கூறியுள்ளனர். எனவே அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து திமுக கூட்டணியில் இணைவது குறித்து ராமதாஸ் ஆராய்வதாக சொல்கிறார்கள். இதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் திமுக, வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வாக்குறுதியை அளிக்க வேண்டும் என்கிற வரையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

பாமக திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் இயல்பாகவே விசிக கூட்டணியில் இருந்து விலகிவிடும். எனவே திமுக கூட்டணியில் பாமக இன்? விசிக அவுட்? என்கிற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

click me!