பாஜக செய்யும் இந்த அநீதியை சகித்துக்கொள்ள முடியாது..!! எரிமலையாய் வெடித்த தைலாவரம் டாக்டர்..!!

By Ezhilarasan BabuFirst Published May 27, 2020, 6:33 PM IST
Highlights

சமூகநீதி தலைவர்களின் ஆதரவை திரட்டி நான் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானது. அவ்வாறு போராடிப் பெற்ற 27 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கும் மறுக்கப்படுவதை சகிக்க முடியாது.

மருத்துவக்கல்வி பறிக்கப்பட்ட பத்தாயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால் அப்பிரிவைச் சேர்ந்த பத்தாயிரம் மாணவர்கள் மருத்துவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பை இறந்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்  மனுவியின் பெயரில் இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவும் அதனால் இளநிலை முதுநிலை மருத்துவ படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்கவேண்டிய சுமார் 10 ஆயிரம் இடங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படும்  குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்த விசாரணையின் முடிவில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதி என்பதிலோ அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்கவேண்டிய பத்தாயிரத்துக்கும் கூடுதலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் பறிக்கப்பட்டு இருக்கின்றன என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கில் விசாரணை நடத்தாமல் தீர்ப்பளிக்கும் அளவிற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.  அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் எனப்படுபவை தனியாக உருவாக்கப்படுபவை அல்ல மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து தான் அந்த இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.  இளநிலை மருத்துவ படிப்பை பொறுத்தவரை 15 சதவீத இடங்களும் முதுநிலை மருத்துவ படிப்பு பொருத்தவரை 50 சதவீத இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.

இந்த இடங்கள் தேசிய அளவில் நீட் தேர்வு தர வரிசையின் அடிப்படையில் தான் நிரப்பப்படுகின்றன என்பதால் தேசிய அளவிலான இட ஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் ஆனால் , மத்திய அரசின் கல்வி நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கும் மத்திய அரசு,  மாநில அரசுகள் ஒதுக்கிய இடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.  பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினருக்கு தேசிய அளவிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்,  இந்த அநீதி உடனடியாக களையப்பட வேண்டும். ஒருவேளை மத்திய சுகாதார அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக் கொண்டால்,  மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய அரசின் கொள்கை படி 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். 

உதாரணமாக தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும்,  27 சதவீத ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் . அகில இந்திய தொகுப்புக்கான இடங்களை நிரப்பும்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு பலமுறை கடிதங்கள் எழுதியும், இந்த சமூக அநீதி களையப்பட வில்லை,  மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு எளிதாக கிடைத்து விடவில்லை, மண்டல் ஆணைய பரிந்துரைப்படி 1990 ஆம் ஆண்டில் விபி சிங் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டாலும்கூட அதன் பிறகு 15  ஆண்டுகளாகியும் கல்வியில் இட ஒதுக்கீடு என்பது கானல் நீராகவே இருந்து வந்தது. 2006ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் சமூகநீதி தலைவர்களின் ஆதரவை திரட்டி நான் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானது. அவ்வாறு போராடிப் பெற்ற 27 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கும் மறுக்கப்படுவதை சகிக்க முடியாது.

அகில இந்திய தொகுப்புக்கான இடங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை அதை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வருகிறது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய வழக்கிலும் பாமக இணைத்துக்கொள்ளும்.  அதேநேரத்தில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும் வரையில் காத்திருக்காமல் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூகநீதியை மத்திய அரசு வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அதேபோல் அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்களை  பின்னடைவு இடங்களாக அறிவித்து,  அதே எண்ணிக்கையிலான கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றைப் பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

click me!