பாமக பாராட்டு விழாவையே ரத்து பண்ணிருக்கோம்..! கொரோனா தடுப்பிற்கு முன்னுதாரணம் காட்டும் ராமதாஸ்..!

Published : Mar 14, 2020, 01:45 PM ISTUpdated : Mar 14, 2020, 03:18 PM IST
பாமக பாராட்டு விழாவையே ரத்து பண்ணிருக்கோம்..! கொரோனா தடுப்பிற்கு  முன்னுதாரணம் காட்டும் ராமதாஸ்..!

சுருக்கம்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கத்துடன் மயிலாடுதுறையில் இன்று நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பில் இத்தகைய எச்சரிக்கை உணர்வும், ஒத்துழைப்பும் தமிழக அரசுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டும். அதுதான் இன்றைய கட்டாயத் தேவை.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இதனிடையே தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றுநோய் என அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் அச்சமோ, பதற்றமோ தேவையில்லை; நிதானமும், விழிப்புணர்வும் தான் தேவை என்பதை உணர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் மழலையர் வகுப்புகளுக்கும், சில மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் விடுமுறை விடப்படுள்ளது. கொரோனா வைரஸ் நோயை தடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உணர்வும், அந்த வி‌ஷயத்தில் காட்டும் அக்கறையும் பாராட்டத்தக்கவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமையானவை அல்ல. கொரோனா வைரஸ் நோய் காற்றிலோ, நீரிலோ பரவுவதில்லை; மாறாக மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மனிதர்களை கை குலுக்குவது உள்ளிட்ட செயல்களின் மூலம் தொடுவதாலோ அல்லது 3 அடிக்கும் குறைவான தொலைவு இடைவெளியில் நெருங்கி இருப்பதாலோ தான் கொரோனா வைரஸ் நோய் பரவுவதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. மனிதர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என்பது தான் கொரோனாவை தடுப்பதற்காக முன்வைக்கப்படும் முதன்மை அறிவுரையாகும். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவுரைப்படி தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள், மாநாடுகள், திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும், இடங்களையும் மூட வேண்டும். அப்போது தான் கொரோனா வைரசை தடுக்க முடியும். அதற்கு மாறாக மழலையர் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பது போதுமானதல்ல. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்திலும், டெல்லியிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களைத் தாண்டி, உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல உயர்நீதிமன்றங்களின் செயல்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தமது குஜராத் பயணத்தை ரத்து செய்துள்ளார். இவற்றையெல்லாம் கடந்து கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நோக்கத்துடன் மயிலாடுதுறையில் இன்று நடைபெறவிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பில் இத்தகைய எச்சரிக்கை உணர்வும், ஒத்துழைப்பும் தமிழக அரசுக்கும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டும். அதுதான் இன்றைய கட்டாயத் தேவை.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் இதுவரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். அவரும் இப்போது குணமடைந்துவிட்டார். அதை நினைத்து தமிழக அரசு அலட்சியமாக இருந்து விடக்கூடாது. ஏனெனில், கொரோனா வைரஸ் எவரும் எதிர்பார்த்திராத வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை இருவர் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர். 83-க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளம், தமிழகத்திற்கு மிக அருகில் உள்ளது. அண்மையில் கேரளத்துக்கு சென்று வந்த அரக்கோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கேரளத்திலிருந்து ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர் எனும் நிலையில், மக்கள் கூடுவதை தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகவளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளை தற்காலிகமாக மூடுவதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!