
பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மீட்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்குபவர், அரசின் திட்டங்கள், அரசு தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக தனது சமூக ஊடக பக்கத்தில் அவர்வெளியிட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு சார்ந்து ஒரு டுவிட்டர் கணக்கும், தனிப்பட்ட முறையில் ஒரு டுவிட்டர் கணக்கும் உள்ளன. அரசு சார்ந்த டுவிட்டர் கணக்கான PMO Indiaவை 45.4 மில்லியர் பேரும், தனிப்பட்ட கணக்கான Narendra modi கணக்கை 73.4 மில்லியன் பேரும் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க போவதாக ஹேக்கர்கள் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனால் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் பதிவான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹேக் செய்யப்பட்ட போது பிரதமர் டுவிட்டரிலிருந்து வெளியான பதிவுகள் நீக்கப்பட்டன.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு எதிராக பல்வேறு கிரிப்டோகரன்சி ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில்தான் இந்த ஹேக்கிங் நிகழ்ந்துள்ளது. இந்த ஹேக்கிங்கை மேற்கொண்டவர்கள் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.