தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த திட்டம்: 275 பக்க அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2020, 4:26 PM IST
Highlights

முதலாவதாக நவம்பர் மாதம் வரை இலவச அரிசி கொடுப்பதை நீட்டித்தல் போன்ற குறுகிய கால திட்டப்பணிகள் மற்றும் கிராமபுற, நகர்புறங்களில் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது எப்படி என்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த அமைக்கப்பட்ட ரங்கராஜன் உயர்நிலை குழுவினர் தங்களது 275 பக்க இறுதி அறிக்கையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறைகள் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரங்கராஜன் தலைமையிலான 24 பேர் கொண்ட இந்த குழு மாநிலம் முழுவதும் பல்வேறு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டும், பலமுறை ஆலோசனை நடத்தியும் வந்தது. இந்நிலையில் இன்று தமிழக பொருளாதார நிலமையை மேம்படுத்துவதற்கான தங்களது கருத்துகள் அடங்கிய 275 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தாக்கல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன், வருவாய் பாதிப்பு பெருமளவு உள்ள நிலையில் இந்த ஆண்டில் வரி உயர்த்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் வருங்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும்போது வரி உயர்த்துவது குறித்து திட்டமிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக முதலமைச்சரிடம் தங்களது பரிந்துரைகளை இரண்டு வகையாக கொடுத்துள்ளதாகவும், முதலாவதாக நவம்பர் மாதம் வரை இலவச அரிசி கொடுப்பதை நீட்டித்தல் போன்ற குறுகிய கால திட்டப்பணிகள் மற்றும் கிராமபுற, நகர்புறங்களில் என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது எப்படி என்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் சுகாதாரத்துறையில் செலவுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சுகாதாரத்துறைக்கென 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் அவசியம் உள்ளது என்பதால் கடன் சுமை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றார். மேலும் 100 நாள் வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்த அவர் கட்டுமானத் துறைக்கென ஒதுக்கப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் செலவு செய்யப்படாமல் உள்ளது, அதை செலவு செய்யும்படியும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் முறையே நடவடிக்கை எடுத்தால் அனைத்து சூழ்நிலைகளும் இன்னும் இரண்டு மாதங்களில் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்றார்.
 

click me!