
பெட்ரோல் - டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை, மறு பரிசீலனை செய்யப்படாது என்றும் பெட்ரோல் விலை உயரத்தான் செய்யும் என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மாதம் இரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை நாள் தோறும் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் ஒவ்வொரு நாளும் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் பெட்ரோல், டீசல் விலை உயர்வது எங்களுக்கும் கவலைதான்; நாங்களும் இதற்காக வருந்துகிறோம்; எனினும் நீண்ட கால தீர்வை நோக்கி போவதால், நாள்தோறும் பெட்ரோல் - டீசல் விலை மாற்றப்படுவது குறித்து மறு ஆலோசனை செய்யப்படாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்களைப் பாதிக்கும் எரிபொருள் விலை உயர்வுப் பிரச்சனையில், இவ்வாறு மத்திய அரசின் பொறுப்பை தட்டிக்கழித்திருக்கும் தர்மேந்திர பிரதான், ‘அதிகரித்து வரும் எண்ணெய் விலையிலிருந்து பெரும் செல்வத்தை ஈட்ட மாநில அரசுகள் முயற்சிக்கக் கூடாது’ என்று ஃப்ரி அட்வைஸ் ஒன்றையும் கூறியுள்ளார். மாநில அரசுகள் நியாயமாகவும், பொறுப்பாகவும் பெட்ரோல், - டீசல் மீது வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.