உங்களுக்கு ஸ்மிருதி.. எங்களுக்கு பிரியங்கா... மோதி பார்க்க தயாராகும் தேசிய கட்சிகள்..!

By Asianet TamilFirst Published Feb 14, 2019, 3:34 PM IST
Highlights

கொங்கு மண்டலத்துக்கு பாஜக மேலிடத் தலைவர்கள் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் தங்கள் பங்குக்கு பிரியங்காவை கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது.

கொங்கு மண்டலத்துக்கு பாஜக மேலிடத் தலைவர்கள் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் தங்கள் பங்குக்கு பிரியங்காவை கொங்கு மண்டலத்துக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளது.

கொங்கு மண்டலம் மீது பாஜக தன் பார்வையைத் திருப்பியிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்த மேலிடத் தலைவர்கள் அடுத்தடுத்து கொங்கு மண்டத்துக்கு விசிட் அடித்தவண்ணம் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு கோவை பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் . இதன் பிறகு கடந்த 10-ஆம் தேதி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 

அடுத்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஈரோட்டில் இன்று நடைபபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா கட்சியினருக்கு பல ஆலோசனைகளை வழங்க உள்ளார். அமித் ஷாவைத் தொடர்ந்து மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கொங்கு மண்டலத்துக்கு வர இருக்கிறார். இன்று விழுப்புரம் வர உள்ள ஸ்மிருதி, ஈரோடு வரும் தேதி இன்னும் முடிவாகவில்லை. என்றாலும் இன்னும் சில நாட்களில் கொங்கு மண்டலத்துக்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பாஜகவின் அகில இந்திய முகங்கள் கொங்கு மண்டலத்தைக் குறி வைத்து அடுத்தடுத்து விசிட் அடிக்கும் நிலையில், இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸ் சும்மா இருக்குமா? அதுவும் ஈரோட்டுக்கு பாஜகவினர் வந்துசெல்வதைப் பார்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட உத்தேசித்திருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சும்மா இருப்பாரா? காங்கிரஸ் கட்சியில் உ.பி. கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா ஈரோடு வருவார் என இளங்கோவன் அறிவித்துள்ளார். 

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதைத் தெரிவித்துள்ளார். “வருகிற  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை ராகுல்காந்தி அளித்துள்ளார். இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தியின் மறு உருவமாக அவரது பேத்தி பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளார். அவரது வருகையால் மோடி அரசு ஆடிப்போய் உள்ளது.

பிரியங்கா நிச்சயம் ஈரோடு வருவார். அவரை வரவேற்க எல்லோரும் தயாராக வேண்டும். மத்தியில் பிரதமராக ராகுல் வரவேண்டும். மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்” என்று இளங்கோவன் பேசினார். 

click me!