சீக்கிரமா தேர்தலை நடத்துங்க... இல்லாவிட்டால் சிரமம் எங்களுக்குத்தான்... தேர்தல் ஆணையத்தை அழுத்தும் அதிமுக... பின்னணி என்ன?

By Asianet TamilFirst Published Feb 7, 2019, 2:55 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு கொடுத்திருப்பதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு கொடுத்திருப்பதன் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரையும், மக்களவை அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் டாக்டர் வேணுகோபாலும் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் மே மாதத்தில் தமிழகத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் என்பதால், முதல் கட்டத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், வரும் கோடையில் கடுமையாகத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தண்ணீர் இருப்பை வைத்து பார்க்கும்போது, ஏப்ரல் மாதம் வரை ஓரளவுக்கு தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க சுமார் 160 கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது. வழக்கமாக தமிழகத்தில் மே மாதத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவது வாடிக்கை. இதுபோன்ற காலத்தில் காலி குடிநீர் குடங்களுடன் பொதுமக்கள் போராடுவதும் வாடிக்கை. இந்த ஆண்டு இந்தப் பற்றாக்குறை சற்று கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த நேரத்தில் தேர்தல் நடந்தால், ஊருக்குள் வாக்குகள் கேட்டு செல்லும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஆளும் அதிமுக கருதுகிறது. அப்படி எழும் எதிர்ப்புகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தி முடித்துவிட்டால், எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று அதிமுக தரப்பில் யோசிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாகவே தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தி முடிக்க அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

click me!