
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கும் பன்னீர்செல்வம் சிறிது சிறிதாக ஓரங்கட்டப்படுவதை தற்போதைய சம்பவம் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம், முதல்வர் பதவி பறிபோனதும் தர்மயுத்தம் நடத்தி, சசிகலாவையும் தினகரனையும் ஓரங்கட்டிவிட்டு பழனிசாமி அணியுடன் இணைந்தார்.
தர்மயுத்தம் நடத்த சென்றதால், இழந்த நிதியமைச்சகத்தை திரும்ப பெற்றதோடு துணை முதல்வர் பதவியையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல், சசிகலா, தினகரனை ஓரங்கட்டியதை உறுதிசெய்யும் வகையில், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான். கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
அதிமுக இனிமேல் கூட்டுத்தலைமையின் கீழ் தான் செயல்படும் என்றும் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் என கட்சியிலும் ஆட்சியிலும் உயர்பதவியில் இருக்கும் பன்னீர்செல்வத்தை பழனிசாமி தரப்பு ஓரங்கட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கட்சியிலும் ஆட்சியிலும் பன்னீர்செல்வத்திற்கு போதிய அதிகாரங்கள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இரு அணிகளும் இணைந்தாலும் கூட மனதளவில் இணையவில்லை என்ற கருத்து பரவலாக நிலவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில், மைத்ரேயன் எம்பி ஒரு டுவீட்டையும் போட்டிருந்தார். இப்படியாக சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு மதுரையில் நடந்த முப்பெரும் விழாவிற்கு பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் அழைக்கக்கூட இல்லை. அந்த விழா நடந்ததே தெரியாது என பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இப்படி தொடர்ச்சியாக பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையே விரிசல் இருப்பது அப்பட்டமாக தெரியவந்தது. ஆனாலும் கூட கட்சியில் பிளவோ அதிருப்திகளோ இல்லை என இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டுவதை சுட்டிக்காட்டும் வகையில் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. வரும் 31-ம் தேதி திண்டுக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில், திண்டுக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் முதல்வர் பழனிசாமி பெயர் பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், துணை முதல்வர் என்று சிறிதாக போடப்பட்டிருப்பதுடன் பன்னீர்செல்வம் என அவரது பெயர்கூட அதில் இடம்பெறவில்லை. மக்களவைத் துணை தலைவர், சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள் ஆகியவற்றுடன் ஒன்றாக துணை முதல்வர் என அச்சிடப்பட்டுள்ளது.
அனைத்து அரசு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளிலும் முதல்வரின் பெயருக்கு கீழே துணை முதல்வர் என போடப்பட்டுவந்த நிலையில், இதில் பன்னீர்செல்வத்தின் பெயர்கூட இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.
பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொள்வதற்காக அவருக்கும் அதிகாரம் வழங்குவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டு தற்போது காரியம் ஆனவுடன் பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் முயற்சி நடந்துவருவதாகவும் பேசப்படுகிறது.