
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. தாலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு, பாகிஸ்தானின் ராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை மிரட்டி, ‘‘பாகிஸ்தான் ராணுவம் வீரர்களைக் கொல்ல அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக உயர் அதிகாரிகள் தங்களுடன் போர்க்களத்திற்கு வரவேண்டும்’’ என்று கூறியுள்ளது.
பல வீடியோக்களை வெளியிட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் , கைபர் பக்துன்க்வாவின் குர்ராமில் அக்டோபர் 8 ஆம் தேதி பதுங்கியிருந்த போர்க்களக் காட்சிகள் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டது. அதில் 22 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தெஹ்ரீக்-இ-தாலிபான் கூறுகிறது. கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள், வாகனங்களையும் வீடியோக்கள் காட்டின.
இதற்கிடையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் கமாண்டர் காசிம் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு மூத்த தெஹ்ரீக்-இ-தாலிபான் வீரர் வீடியோவில் தோன்றி, "நீ ஒரு ஆணாக இருந்தால் எங்களை எதிர்கொள்" என்று அசிம் முனீரை மிரட்டினார்.
அதே வீடியோவில், காசிம் பின்னர், "நீ உன் தாயின் பால் குடித்திருந்தால் எங்களுடன் சண்டையிடு" என்று கூறுகிறார். இவரை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் 10 கோடி பரிசு அறிவித்துள்ளனர்.
காபூலில் உள்ள பாகிஸ்தான் மற்றும் தாலிபான் தலைமையிலான அதிகாரிகள் அக்டோபர் நடுப்பகுதியில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இரு தரப்பிலும் பொதுமக்கள் உயிர்களைக் கொன்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.