
படிப்பறிவில்லாதவன் பட்ஜெட் போட்டால் கூட அதில் சாதகமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையிலான கவர்ச்சியான அறிவிப்புகள் இல்லை. ஆனால், விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும், விவசாய கடனாக 11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு, ஆபரேஷன் கிரீனுக்காக 500 கோடி ஒதுக்கீடு என விவசாயத்திற்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அதேபோல, சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் 50 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டம் கொண்டுவரப்படும். ஒவ்வொருவரும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு பெறலாம். இந்த திட்டத்துக்கான நிதி எதிர்காலத்தில் திரட்டப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
அருண் ஜேட்லியின் இந்த அறிவிப்பை, பணமில்லா திட்டம், நூலில்லா பட்டம் போன்றது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கனவே டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விளக்கினார்.
அப்போது, மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுத்து அவற்றை முறைப்படுத்தி மாநில அரசுகளின் ஒப்புதலை பெறுவதற்குள் மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் முடிந்துவிடும். ஆட்சியின் கடைசி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்று அறிவிப்பு தானே தவிர மக்கள் நலனுக்கானது அல்ல என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
அப்படியென்றால், பட்ஜெட்டில் சாதகமான விஷயங்களே இல்லையா? என்ற கேள்விக்கு, சாதகங்கள் இருக்கத்தான் செய்யும். படிப்பறிவில்லாதவன் பட்ஜெட் தாக்கல் செய்தால் கூட அதில் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக பட்ஜெட்டை நல்ல பட்ஜெட் என எடுத்துக்கொள்ள முடியாது என ப.சிதம்பரம் விமர்சித்தார்.