எடப்பாடியால் ஏக போக குஷியில் பன்னீர் கோஷ்டி... பட்டாசே வெடிக்காமல் கொண்டாடும் ஹேப்பி மேட்டர்!!

By sathish kFirst Published Oct 13, 2018, 3:43 PM IST
Highlights

தன்னை சந்திக்க கூட நேரம் ஒதுக்காத எடப்பாடி தொடர்ந்து சிக்கலில் மாட்டிவருவதை பட்டாசு வெடிக்காத குறையாக கொண்டாடிவருகிறாராம் பன்னீர்செல்வம்.

எதிர்க்கட்சியின் தொடர்ந்த நச்சரிப்பால், மிஞ்சிப் போனால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்தான் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு வரும் என எடப்பாடி தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தது. ஆனால், இப்போது வழக்கை சிபிஐக்கு மாற்றியதால், அதிர்ச்சி ஆகியிருக்கிறார் எடப்பாடி.

 ‘ஏற்கெனவே நம்மை வெச்சு மத்திய அரசு ஆட்டம் காட்டிட்டு இருக்கு. இப்போ இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாத்திட்டாங்க. இனி அவங்க வைக்கிறதுதான் சட்டம்னு பேசுவாங்க. அவங்க சொல்றதை கேட்கலைன்னா குடைச்சல் கொடுப்பாங்க’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்.

அதே நேரத்தில், பன்னீர் அணி செம சந்தோஷத்தில் இருக்கிறதாம். பன்னீர் என்னை வந்து சந்தித்தார் என்று தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னதும், அதற்கு பன்னீர் விளக்கம் கொடுத்ததும் தெரிந்ததுதான். ஆனால், தினகரன் அப்படியான ஒரு புகாரை சொன்ன பிறகு உளவுத் துறை மூலமாக விசாரித்திருக்கிறார் எடப்பாடி.

உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட்டில், ‘தர்மயுத்தத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட, உங்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை தொடர்ந்து செய்திருக்கிறார். தினகரன் சொல்வது உண்மைதான்!’ என்று கொடுத்திருக்கிறார்கள். அந்த செய்திக்குப் பிறகு பன்னீர் மீது கொலைவெறிக்கு ஆளாகியிருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில்தான் தன்னிலை விளக்கம் கொடுக்க, எடப்பாடியை சந்திக்க நேரம் கேட்டாராம் பன்னீர். ஆனால், எடப்பாடியோ, இதுவரை பன்னீரை சந்திக்க நேரம் ஒதுக்கவே இல்லையாம். இன்று எடப்பாடி வழக்கு சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றப்பட்டது என்ற தகவல் பன்னீருக்கு சொல்லப்பட்டதும், ‘ஒரு சிக்கல் வந்தால் எப்படியெல்லாம் கஷ்டம் வரும்னு இப்போ அவருக்குப் புரியும்’ என்று அவரோடு இருந்த நிர்வாகிகள் சிலர் கமெண்ட் அடித்திருக்கிறார்கள். கூடவே எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை பன்னீர் தரப்பு பட்டாசு போடாத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

தீபாவளிக்கு முன்பே மனசுக்குள் பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கும் பன்னீர் கோஷ்டிக்கு உண்மையான வெடிவைக்க தக்கதருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம் எடப்பாடி.

click me!