
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை மின்கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர்.
இந்த இரு தரப்பினரும் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டது.
.இதையடுத்து ஓபிஎஸ் அணிக்கு மின் கம்பம் சின்னமும் தினரனுக்கு தொப்பு சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் ஒப்பிட்டு வாக்காளர்களை குழப்பி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தலைமையிலான சசிகலா அணி புகார் அளித்தது,
இதற்கு இன்றைக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் மதுசூதனனுக்கு நோட்டீஸ் அளித்தது,
இந்நிலையில் மதுசூதனன் சார்பில் மனோஜ் பாண்டியன் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று கடிதம் மூலம் விளக்கம் அளித்தார்.
அதில், இரட்டை மின்கம்பம் சின்னத்தை நான் தவறாக பயன்படுத்தவில்லை என்றும் தினகரன் தான் தனது பிரசாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியின் பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.