
தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரனுக்கு தொப்பி சின்னமும், பன்னீர் அணிக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
அதனால், தொப்பி சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தினகரன் தலையில் தொப்பி அணிந்தவாறு வாக்கு சேகரித்து வருகிறார்.
அவரது ஆதரவாளர்களும், தலையில் தொப்பியுடன், ஆர்.கே.நகரில் ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போதாதென்று, தொகுதிக்குள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு தொப்பியை இலசவமாக வழங்கி வருகின்றனர்.
இதை உன்னிப்பாக கவனித்து வந்த பன்னீர்செல்வம் அணி, பல லட்ச ரூபாய் செலவு செய்து, தொப்பிகள் வாங்கியுள்ளதாக தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளது.
அதில், தேர்தல் பிரசாரத்துக்காக தினகரன் அணியினர் 60 ஆயிரம் தொப்பிகள் வாங்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வேட்பாளர் தேர்தலுக்காக 28 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய முடியும். ஆனால் தொப்பிக்காக மட்டுமே 18 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நடத்தை விதி மீறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பாபுமுருகவேல் என்பவர், சென்னையில் தேர்தல் கணக்கு பார்வையாளரிடம் இந்த புகாரை அளித்துள்ளார்.
இந்த புகாரை, தினகரன் எப்படி சமாளிக்க போகிறார்? என்று தெரியவில்லை.