
இப்போதும் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் அதன் பின்னர் யாரும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை , சசிகலா தேர்வு செல்லாது என்று ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்தார்.
இது பற்றி செய்தியாளர்களிடையே அவர் கூறியதாவது:
நாங்கள் தான் உண்மையான அதிமுக. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய மக்களும் எங்கள் பக்கம் தான்.
இந்த ஆட்சியை தாங்கிபிடிக்கின்ற 122 சட்டமன்ற உறுப்பினர்களும் , இவர்களும் , உண்மையான அதிமுக இல்லை. எதிர்காலத்தில் மக்களின் நீதிமன்றத்தில் இவர்கள் நிலை தீர்மானிக்கப்படும்.
முதல்வர் மறைவுக்கு பிறகு கட்சியை காப்பாற்ற வேண்டிய அசாதாரணமான சூழல் உருவானது. அப்போது எடுக்கப்பட்ட முடிவு அது. ஆனால் பொதுச்செயலாளர் என்பவர் கட்சி தொண்டர்கள் வாக்களித்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை அவைத்தலைவரும் , பொருளாளரும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும்.
ஆகவே சசிகலா பொதுச்செயலாளர் என்பது சட்டப்படி சரியானது அல்ல. இன்றைக்கும் கட்சி பொதுச்செயலாளர் யார் என்றால் மறைந்த முதல்வர் அம்மா மட்டுமே. சசிகலா தேர்வு செல்லாது.
அவருடைய தேர்வே செல்லாது என்கிறபோது அவரால் நீக்கப்பட்டவர்களும் , இணைக்கப்பட்டவர்களும் மாற்றங்களும் செல்லாது. கழக அடிப்படை உறுப்பினராக இல்லாத நீக்கப்பாட்ட ஒருவரை எப்படி துணைப்பொதுச்செயலாளராக ஆக்க முடியும்.
ஆட்சி கலைக்கப்பட்டு திமுக ஆட்சி வரும் என்று ஸ்டாலின் கூறுகிறாரே?
நாட்டில் எவ்வளவோ கட்சி இருக்கு அவர்கள் விருப்பப்பட்ட கருத்தை சொல்கிறார்கள் . அது பற்றி எல்லாம் கருத்து கூற முடியாது.
முதல்வரின் அறிவிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?
இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் அம்மாவின் சமூக நலத்திட்டங்களை பின்பற்றித்தான் ஆட்சி நடத்த வேண்டும். இவர்கள் அறிவித்தது அனைத்தும் ஏற்கனவே அம்மாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான்.
சபாநாயகர் மீது திமுகவின் நம்பிக்கை இல்லாதீர்மானத்தை ஆதரிப்பீர்களா?
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைபாடு. நான் அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது .