
இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது…. ஓபிஎஸ் மகிழ்ச்சி !
அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுகவில் ,டிடிவி.தினகரன் தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.
ஆனால் டி.டி.வி.தினகரன் மீது பெரா வழக்கு, இரட்டை இலை சின்னத்தை லஞ்சம் கொடுத்து பெற முயன்ற வழக்கு என அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஓபிஎஸ் , இரு அணிகளும் இணைந்து செயல்படலாம் என்றும், ஜெ மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இது சாத்தியம் என அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே டி.டி.வி.தினகரனும் கட்சியை விட்டு விலகிக் கொள்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இரு அணிகளின் தலைவர்களும் தொடர்ந்து நிபந்தனைகளை விதித்து வந்ததோடு இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை குறித்து குழப்பமான சூழ்நிலையும் இருந்து வந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் இன்று அவரது க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் இணைப்பு பேச்சுவார்தைக்காக உருவாக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகான உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் .எனவே இரு அணிகளும் இந்த நல்ல சூழலில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் விரைவில் அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை தொடங்கும் என தெரிவித்தார்.