
போயஸ் கார்டனில் குடியேறுகிறார் ஓபிஎஸ்…நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க புதிய வீடு ரெடி…
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தற்போது வசித்து வரும் அரசு வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால், போயஸ் கார்டன் பகுதியில் உள்ள புதிய வீட்டில் அவர் குடியேறுகிறார்.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களின் பங்களாக்கள் உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஓபிஎஸ் அவருக்காக ஒதுக்கப்பட்ட தென்பெண்ணை பங்களாவில் குடியிருந்து வருகிறார்.
அவர் முதலமைச்சராக பதவியில் இருந்தபோதும் ஓபிஎஸ் தனக்காக ஒதுக்கப்பட்ட தென்பெண்ணை வீட்டிலேயே வசித்து வந்தார்.வீட்டின் முகப்பில் உள்ள நிதி அமைச்சர் என்ற பெயர் பலகையைக் கூட மாற்றாமல் இருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக வில் ஏற்பட்ட பிளவால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
ஓபிஎஸ் முதலமைச்சர் பதவியை இழந்ததால் அவர் தற்போது குடியிருக்கும் அரசு பங்களாவை உடனடியாக காலி பண்ண வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற சில மணி நேரங்களிலேயே பொதுப்பணித்துறை சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.
பொதுவாக ஒரு முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ பதவி இழந்து 6 மாதங்கள் வரை அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்ய அவகாசம் அளிக்கப்படும். ஆனால் வீட்டை காலி செய்து தரும்படி பொதுப் பணித்துறை சார்பில் ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெண்பெண்ணை அரசு பங்களாவில் இருந்து வெளியேற ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். அவரது அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தின் பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் குடியேற அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்காக அப்பகுதியில் வீடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிதாக குடியேற உள்ள வீட்டிலேயே ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிக தொண்டர்கள் அமரும் வகையில் வீட்டை மாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.