
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ராமநாத புரம் மாவட்டம் பாம்பன் மீன் பிடி தளத்தில் இருந்து 5 மீனவர்கள் எந்திர மீன் பிடி படகிலும் 7 மீனவர்கள் மோட்டார் பொருத்திய நாட்டுப்படகிலும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படை 21-12-2016 அதிகாலை கைது செய்துள்ளது.
மேலும் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி தளங்களில் இருந்து 12 மீனவர்கள் இரு எந்திர படகுகளிலும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 5 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றபோது 21-12-2016 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 20-12-2016 அன்று 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த ஒரே நாளில் இந்த தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இலங்கை மன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பிடித்துச்செல்லப்படுவது, துரதிர்ஷ்டவசமானது. பாரம்பரிய மீன் பிடி நீர் எல்லை குறித்து இந்தியா- இலங்கை மீனவர்கள் அளவிலும் இரு நாடுகளின் அமைச்சக அளவிலும் பேச்சு வார்த்தை நடந்து வரும் போது இது போன்று இந்திய மீனவர்கள் பிடித்துச்செல்லப்படுகிறார்கள். தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வதாரத்திற்கு பாக் வளை குடாவில் பாரம்பரிய நீர் பகுதியில் நமது மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். ஆனால் இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை பிடித்துச்செல்கிறது. நமது மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவை மீட்டெடுப்பதன் மூலம் நமது மீனவர்கள் பாரம்பரிய நீர் பகுதியில் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும் என முதலமைச்சா் தொிவித்துள்ளா்.
தற்போது இலங்கை சிறையில் 21-12-2016 அன்று கைது செய்யப்பட்டுள்ள 29 மீனவர்கள் மற்றும் 5 மீன் பிடி படகுகள் உள்பட மாெத்தம் 54 தமிழக மீனவர்களையும் 114 மீன் பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சா் திரு. ஓ. பன்னீா்செல்வம் பிரதமர் திரு. நரேந்திர மாேடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.