
பன்னீரை பாஜக வின் ஏஜென்ட் என்று குற்றம் சாட்டும் தினகரன், அதிமுக உடைப்பு முயற்சியின், பின்னணியில் பாஜக இருப்பதற்கான உறுதியான தகவல் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக துணை பொது செயலாளர் தினகரன் மேலும் கூறியதாவது:-
அதிமுகவை பிளவு படுத்தும் முயற்சிக்கு பின்னால் பாஜக இருப்பதற்கான உறுதியான தகவல் எதுவும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அப்படி உறுதியான தகவல் கிடைத்தால், அதை முறியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தமிழகத்தை காவிமயமாக்க முயற்சி நடைபெற்று வருவதாக நடராசன் பேசியது குறித்து கேட்டபோது, அவரது கருத்தை அதிமுகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்றார்.
கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில், வைகை செல்வன், அன்வர் ராஜா போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக எழுதி வரும் கருத்துக்கள் குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, வைகை செல்வன், அன்வர் ராஜா ஆகியோரின் கருத்துக்களை என்னுடைய கருத்தாக்க எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தினகரன் கூறினார். மேலும் தமிழிசை, பொன்னார் போன்றவர்களின் கருத்துக்களை பாஜக தேசிய தலைமையின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தில் 25 ஆண்டுகள் கழித்து கூட பாஜக வால் ஆட்சியை பிடிக்கமுடியாது என்றார். தமிழகத்தில் காலூன்றுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதுவும், எதிர்பார்த்த பலனை தராது என்றும் அவர் கூறினார்.
உங்கள் மீதுள்ள வழக்குகள் காரணமாக, பாஜக விஷயத்தில் அடக்கி வாசிக்கப்படுகிறதா? என்ற போது, என் மீதுள்ள வழக்குகள் எதுவும் தூக்கு தண்டனை வழங்கும் அளவுக்கு பெரிய வழக்குகள் அல்ல. அதை எப்படி சமாளிப்பது? என்று எனக்கு தெரியும் என்றார்.
குறிப்பாக, பன்னீர்செல்வத்தையும், ஸ்டாலினையும், தமது பேட்டியில் விமர்சித்த அளவுக்கு, பாஜகவை விமர்சிப்பதில் மிகவும் அடக்கியே வாசித்தார் தினகரன்.