
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான தகவல் தொழில்நுட்ப பிரிவு, அவருக்கு ஆதரவாக வாய்ஸ் எஸ்.எம்.எஸ். மூலம் மக்களிடம் ஆதரவு கோரி வருகிறது.
38 விநாடிகள் ஓடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த ஆதரவு செய்தியில், , ‘நான்தான் உங்கள் ஓ.பி.எஸ். பேசுகிறேன்’ என்று தொடங்கும் அந்த குரல், தொடர்ந்து முதல்வர் பணியாற்ற என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று மக்களிடம் ஆதரவு கேட்டு, நன்றியுடன் முடிகிறது.
இந்த வாய் எஸ்.எம்.எஸ். ஆதரவு பிரசாரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ‘மிஸ்டுகால்’ பிரசாரத்தை கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு கோரி தொடங்கப்பட்ட இந்த ‘மிஸ்டு கால்’ திட்டத்தில், முதல் இரு நாட்களில் 2.5 லட்சம் பேர் ‘மிஸ்டு கால்’ விட்டு தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். வெளிநாடுகளில் இருந்து 1.5 லட்சம் பேர் மிஸ்டு கால் விட்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
முதல்வர் பன்னீர் செல்வத்துக்காக இப்போது உழைக்கும் தகவல் தொழில்நுட்ப பிரிவு, உண்மையில் அதிமுக பொதுச்செயலாளர்சசிகலாவுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து அந்த ஐ.டி.பிரிவு ஓ.பி.எஸ்.பக்கம் சாய்ந்துள்ளது.
இது குறித்து அதிமுகவின் ஐ.டி. பிரிவு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ கடந்த 3 நாட்களில் மிஸ்டு காலம் மூலம் 30 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குரலை மையப்படுத்தி, அனைத்து மக்களிடம் ஆதரவு கேட்கும் வகையில் செயல்படுத்தி இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.