ஓபிஎஸ்-இபிஎஸ் பதவி விலக வேண்டும்... அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!!

Published : Mar 03, 2022, 02:33 PM IST
ஓபிஎஸ்-இபிஎஸ் பதவி விலக வேண்டும்... அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!!

சுருக்கம்

அதிமுகவின் எதிர்கால நலன் கருதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுகவின் எதிர்கால நலன் கருதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மீண்டும் தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் அதிமுக- அமமுக இணைய வேண்டும் என்றும் சசிகலா,  தினகரன் ஆகியோர் அதிமுகவிற்குள் வர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். தேனி மாவட்ட அதிமுகவினர் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு உள்ளனர். சசிகலா, தினகரன் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவிற்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தொடர் தோல்விக்கு காரணமான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கட்சியின் எதிர்கால நலன் கருதி பதவி விலக வேண்டும் என்று அதிமுகவினர் சில இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதனால் அதிமுகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அதிமுகவினர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். வெற்றிவேல் என்பவர் இந்த போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார். சின்னம்மாவின் உண்மை விசுவாசி என்ற பெயரில் இந்த போஸ்டர் உள்ளது. மேலும் அந்த போஸ்டரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி சின்னம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்சியை கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓபிஎஸ் -இபிஎஸ் கட்சியின் எதிர்கால நலன் கருதி பதவி விலக வேண்டும்.

ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது. புதுவை மாநிலத்தில் கட்சி அடியோடு காணாமல் போய்விட்டது. அதேபோல தமிழகத்திலும் கட்சியை காலி செய்வதற்கு சிலர் சதி செய்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 50 லட்சம் தொண்டர்கள் கட்சியை விட்டு மாற்றுக் கட்சிக்கு சென்றுவிட்டதாகவும் சுமார் 50 லட்சம் தொண்டர்கள் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவருகின்றன. அம்மாவின் விசுவாசிகள் பொறுமை காக்க வேண்டும். சின்னம்மா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் வழிநடத்த வேண்டும் என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!