
தவறு செய்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். இந்த விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பேசும்போது, சொல்லிய இயேசு சொன்ன குட்டிக் கதைதான் தற்போது ஹைலைட்டாகியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “'நான் நல்லவர்களை காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம் திருந்தச் செய்யவே, நான் வந்திருக்கிறேன். நல்லவர்கள் என்றுமே நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று இயேசு கூறினார்'' என்று ஓபிஎஸ் பேசினார்.
தவறு செய்து திருந்தி வந்தவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கு ஏற்புடையது என்று ஓபிஎஸ் பேசியிருப்பது யாரை என்றுதான் அரசியல் களம் சூடாகியிருக்கிறது. அவர் சசிகலாவைதான் சொல்கிறார் என்பது ஒரு புரிதல். அதிமுகவில் இணைய போராடி வரும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வோம் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். சசிகலாவால் முதல்வர் பதவியை இழக்க நேர்ந்த ஓபிஎஸ்கூட அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பச்சைக் கொடி காட்டிவிட்டதாக அதிமுகவில் கூறப்படுகிறது. சசிகலாவால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அவரை சேர்க்க விரும்பாத நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்தப் பேச்சு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில்தான் அதிமுகவிலிருந்து சசிகலா உள்பட அவருடைய உறவினர்கள் 12 பேரை கட்சியை விட்டு தூக்கியெறிந்தார் சசிகலா. பின்னர் மனம் திருந்தி மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், சசிகலாவை 4 மாதங்களிலேயே மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதாவது, மனம் திருந்தி வந்தார் என்பது கோடிட்டிக் காட்ட வேண்டிய சமாச்சாரம். இதே டிசம்பரில்தான் ரத்தத்தின் ரத்தங்கள் அழுது, புலம்பி சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக்கினார்கள். 2017-இல் அதிமுக ஆட்சி கவிழாமல் பார்த்துக்கொண்டதில் சசிகலாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்நிலையில் ஓபிஎஸ் கூறியுள்ள கதையின் மூலம் சசிகலா அதிமுகவில் உள்ளே வருவதற்கு இந்த டிசம்பர் மாத சிறு அதிர்வு உதவுமா என்பது போகப்போகத் தெரியும்.