அபூர்வமான கண்டுபிடிப்பு... அமித் ஷாவைக் கலாய்த்த மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Jan 31, 2019, 11:03 AM IST
Highlights

மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது என்பதை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்தியில் கூட்டணி ஆட்சிதான் அமையப்போகிறது என்பதை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி சிலைத் திறப்பு விழா ஈரோட்டில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்து பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு முன்பாக, மத்தியில் கூட்டணி அரசு அமைந்தால், ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார் என்றும் அந்த வரிசையில் சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்றும் பாஜக தலைவர் அமித் ஷா உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது முக்கியத்துவம் பெற்றது.

 

அமித் ஷாவின் பேச்சுக்கு பதில் தரும் வகையில் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசினார். “எங்களைப் பற்றி உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ‘எதிர்கட்சி அணி வெற்றி பெற்றால் திங்களன்று மாயாவதி, செவ்வாய் அகிலேஷ்யாதவ், புதன் மம்தா, வியாழன் சரத்பவார், வெள்ளி தேவகவுடா, சனிக்கிழமை ஸ்டாலின் என ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

 

நான் சனிக்கிழமை பிரதமராம்!’. இதை நான் சொல்லலை, அமித்ஷா சொல்கிறார். அவரது இந்த அபூர்வமான கண்டுபிடிப்பு மூலம், எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி தான் மத்தியில் அமையும் என்பதை அமித் ஷா உறுதிப்படுத்தி இருக்கிறார். எங்கள் கூட்டணியில் நாங்களாவது ஒவ்வொரு நாளைக்குப் பிரதமராக இருப்போம். ஆனா, உங்க பிரதமர் மோடிதான் இந்தியாவுலயே இருக்குறதில்லையே” என அமித் ஷாவுக்கு பதிலடி தந்து பேசினார் ஸ்டாலின்.

click me!