அமைதியான ராவ்காரு... தீவிரம் குறையாத நாயுடுகாரு... டெல்லியில் எதிர்க்கட்சிகள் இன்று மீட்டிங்!

By Asianet TamilFirst Published May 21, 2019, 7:52 AM IST
Highlights

கருத்துக்கணிப்புகளை முழுமையாக நிராகரித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வழக்கம்போல அணி சேர்க்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டிவருகிறார். நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் சந்திரபாபு நாயுடு. அதன் அடிப்படையில்தான் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அணி சேர்க்கும் பணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டிவருகிறார்.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் முடிந்ததும், எக்ஸிட் போல் என்றழைக்கப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இந்தக் கருத்துக்கணிப்புகளில் எல்லாம் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், 2004-ல் நடந்ததுபோல தலைகீழாக தேர்தல் முடிவு வரும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.
மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக  மேற்கொண்டுவருகிறார். இவரைப்போலவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முயற்சி மேற்கொண்டுவருகிறார். கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு பிறகு சந்திரசேகர ராவ் அமைதியாகிவிட்டார். தாங்கள் எதிர்பார்த்ததுபோல எதுவும் நடக்காது என்ற முடிவுக்கு அக்கட்சி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், கருத்துக்கணிப்புகளை முழுமையாக நிராகரித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வழக்கம்போல அணி சேர்க்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டிவருகிறார். நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் சந்திரபாபு நாயுடு. அதன் அடிப்படையில்தான் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இன்று டெல்லியில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், எந்த கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காவிட்டால், உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து வைப்பதற்கான பணிகளைப் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளில் சிறியக் கட்சி தொடங்கி பெரிய கட்சிகள் வரை ஒவ்வொரு கட்சியிடமும் ஆதரவு கடிதங்கள் பெறுவது பற்றியும் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!