
திமுக அரசுக்கு எதிரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வியாழக்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். "மு.க. ஸ்டாலின் அரசை தூக்கி எறிய வேண்டும்" என்ற பழனிசாமியின் பேச்சை நிராகரித்த அவர், திமுக கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் பேச்சு ஆளும் கட்சிக்கு மறைமுகமாக உதவுவதாகவும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்பது வெறும் கனவுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.' இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, "திமுக கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது. 200 இடங்களைத் தாண்டி, 220 இடங்கள் வரை ஜெயிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த விரக்தியில்தான், எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்களுக்கு சாதகமாகப் பேசி வருகிறார்கள்.
இது எங்களுக்கு 'Blessing in disguise' (ஒருவகையில் வரம்) போல உள்ளது. அதிமுக ஆட்சி அமைக்கும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்றெல்லாம் பாஜக தலைவர் சொல்வது அவர்களின் கனவு மட்டுமே," என்று கூறினார். புதன்கிழமை அன்று சென்னையின் வேளச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வரவிருக்கும் தேர்தலில் திமுக அரசை "தூக்கி எறிய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான் ஆர்.எஸ். பாரதியின் கருத்துகள் அமைந்துள்ளன. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநில அரசு 'செயல்படாமல்' இருக்கிறது என்றும் பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும் வரை கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாது என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சாவை ஒழிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
திமுக அரசை 'குடும்ப ஆட்சி' என்று விமர்சித்த அவர், முந்தைய அதிமுக அரசுகள் ஏழை எளிய மக்களுக்காகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். "மக்கள் கவனமாக சிந்தித்து, நமது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இந்த திமுக அரசு ஆட்சியில் இருக்கும் வரை கஞ்சா விற்பனையை நிறுத்த முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும்.
இது ஒரு குடும்ப ஆட்சி. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்தான் இந்த அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அதிமுக ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் உருவாக்கப்பட்ட கட்சி. எங்கள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நல்லாட்சியைக் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் மீண்டும் அந்த நல்லாட்சியைக் கொண்டுவர, வேளச்சேரியில் நமது அதிமுக வேட்பாளர் அசோக்கிற்கு 'இரட்டை இலை' சின்னத்தில் வாக்களிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று பழனிசாமி பேசினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.