
நாட்டில் வெங்காயம் போதிய அளவில் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் சமையலில் பயன்படுத்துவதற்கு வெங்காயம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வெங்காயம் விளைச்சல் குறைவு ஒருபுறம் என்றாலும், அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து உள்ளது. இதனால் வெளிநாட்டுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. ஒரு கிலோ ரூ.30 என விற்கப்பட்டு வந்த பல்லாரி வெங்காயம் திடீரென ரூ.60க்கும், பின்பு ரூ.80க்கும் உயர்ந்து சதம் அடித்தது.
வெளிச்சந்தைகளில் பல்லாரி வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் விலை ரூ.160க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.
இதனால் ஓட்டல்கள், உணவகங்களில் வெங்காயத்திற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. வெங்காய பஜ்ஜி, வெங்காய வடை ஆகியவற்றில் வெங்காயமே காணவில்லை என புகார் தெரிவிக்காத குறையாக வெங்காயங்கள் இல்லாமல் போனது. இதனால் வெங்காயத்திற்கு பதிலாக முட்டை கோஸ் , வெள்ளரி போன்றவை அந்த இடத்தினை பிடித்துக் கொண்டது.
சில இடங்களில் பணத்தை விட வெங்காயங்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இதுபோன்ற அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க, உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சில கடைகளில் ஆதார் அட்டைகளை அடகு வைத்து விட்டு வெங்காயங்களை கடனாக பொதுமக்கள் பெற்று செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த கடைகளை சமாஜ்வாடி கட்சியின் இளைஞரணி தொண்டர்கள் நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி வியாபாரி ஒருவர் வெங்காய விலை உயர்வுக்கு எதிரான எங்களுடைய எதிர்ப்பினை பதிவு செய்வதற்காக இப்படி செய்கிறோம். வெள்ளி நகைகள் அல்லது ஆதார் அட்டையை வாங்கி வைத்து கொண்டு நாங்கள் வெங்காயங்களை கொடுத்து வருகிறோம். சில கடைகளில், வெங்காயங்கள் லாக்கர்களில் கூட வைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்/