
ஒரேயொரு வார்த்தை! ஓஹோ வாழ்க்கை! என்பது நச்சென பொருந்துவது ரஜினிக்கு மட்டும்தானே. ‘நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்’ என ஒற்றை வரியில் தேசத்தையே குலுங்க வைத்திருக்கிறார் மனிதர்.
டிசம்பர் 30-ம் தேதி வரை ரஜினிகாந்தை ‘ஆக்டர்’ என அழைத்துக் கொண்டிருந்த ஆங்கில சேனல்கள், நேற்றிலிருந்து அவரை ‘நேதா’ (தலைவர்) என விளிக்க துவங்கியுள்ளன. அத்தனைக்கும் காரணம் அந்த ஒற்றை வரிதான்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பை அரசியல், சினிமா துறை வி.ஐ.பி.க்கள் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதன் மின்னல்வேக பதிவு இது...
“தன் ரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்ப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி. பாராட்டுக்கள். ஆனால் இவரது வருகை பற்றி தி.மு.க. கவலைப்படாது.”
- ஸ்டாலின்
“தமிழகத்தில் ஊழலை எதிர்க்க மேலும் பலம் தேவை. இந்த சூழலில், ஊழலற்ற நிர்வாகம் தரவே அரசியலுக்கு வருகிறேன் என சொல்லியிருக்கும் ரஜினியை வரவேற்கிறோம்.”
- தமிழிசை
“ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். அவர்களின் நம்பிக்கையை பெற்றால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன்.”
- ஜி.கே.வாசன்.
“ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் ரஜினி ‘ஆன்மிக அரசியல் நடத்துவேன்.’ என்கிறார். உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவை. ஆனால் அதில் போட்டியிடப்போவதில்லை என்றிருக்கிறார். அவரது அறிவிப்பு தன் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாகவே கருதுகிறோம்.
- முத்தரசன்.
“ரஜினி என் நெருங்கிய நண்பர். அவரது வருகை தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். விரைவில் அவரை சந்திப்பேன். அவரது எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.”
- அழகிரி
“அரசியலுக்கு ரஜினி வருவது மகிழ்ச்சி. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வெற்றி என்பது மக்களின் கையில்தான் இருக்கிறது.”
- தினகரன்.
“அரசியலுக்கு வரும் ரஜினிக்கு வாழ்த்துக்கள். அவர் தன் பேச்சில் அ.தி.மு.க.வை தான் விமர்சித்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தி.மு.க.வை கூட விமர்சித்திருக்கலாம்.”
- ஜெயக்குமார்.
“திரைப்படத்தில் வேண்டுமானால் லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் அப்படின்னு வசனம் பேசலாம். ஆனால் அரசியலில் முடியாது. ஒரு இயக்கத்தை நடத்துவதில் உள்ள கஷ்டம் இனிதான் அவருக்குப் புரியும்.”
- செல்லூர் ராஜூ
“சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக! வருக!”
- கமல்ஹாசன்.
“தலைவா நன்றி! வரச் சொன்னோம், வந்துவிட்டாய்! இனி நல்லதே நினைப்போம், பேசுவோம், செய்வோம், நல்லதே நடக்கும்”
- ராகவா லாரன்ஸ்.
“தமிழகத்தில் ஊழல், பினாமி அரசை அகற்ற வேண்டியது அவசியம். அதேபோல் மத்தியில் உள்ள மதவாத மக்கள் விரோத அரசையும் அகற்ற வேண்டும். நண்பர் ரஜினியின் அறிவிப்பை வரவேற்கிறேன்.”
- திருநாவுக்கரசர்.
“ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. நல்லவர்கள் அரசியலுக்கு வருவதில் மகிழ்ச்சி.”
- சித்தராமைய்யா.
“வா தலைவா வா! கடைசியில் சொன்னாரு பாருங்க ‘அரசியலுக்கு, அப்புறமா வருவோம். அதுவரை போராட்டம், ஆர்பாட்டம் வேண்டாம். அரசியல் பேசவேண்டாம்.’ அப்போ எப்படி? அதான் புரியலை.”
- கஸ்தூரி
“என் சிறந்த நண்பர், சக நடிகர், மனிதாபிமானமுள்ள நபர் ரஜினி. அவர் அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.”
- அமிதாப் பச்சன்.
“அதிர்ச்சி! ஆனால் ஆனந்த அதிர்ச்சி அளித்துவிட்டார் ரஜினி. இனி அவர் பின்வாங்க கூடாது. உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறக்கூடாது.”
- காமெடியன் விவேக்
“ரஜினி படிப்பறிவில்லாதவர். அவர் அரசியலுக்கு வருவதை மீடியாக்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள்.”
- சுப்பிரமணியன் சுவாமி.
“ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எதையும் எதிர்கொள்ளும் தைரியம் எங்கள் கழகத்துக்கு உள்ளது.”
- துரைமுருகன்.