கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார்..? ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி ட்விஸ்ட்..!

By Asianet TamilFirst Published Sep 19, 2020, 8:52 AM IST
Highlights

துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்று அதிமுக அவசர ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விவகாரம், கட்சிக்கு வழிகாட்டுதல் குழு அமைப்பது போன்ற பிரச்னைகள் பற்றி சூடான விவாதம் நடைபெற்றது. ஆனால், கூட்டத்தில் நடந்ததைப் பற்றி மீடியாக்களிடம் யாரும் பேசக் கூடாது என்ற உத்தரவும் கூட்டத்தில் இடப்பட்டது. எனவே கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் மட்டும் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “செயற்குழு கூட்டுவது தொடர்பாக மட்டும் விவாதிக்கப்பட்ட”தாக தெரிவித்தார்.
ஆனாலும், கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது மட்டும் வெளியே கசிந்தது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே கட்சி பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இரு தினங்களுக்கு முன்புகூட முதல்வரிடம், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வாரம் இரு முறை சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க இருப்பதாகச் சொன்னேன். உடனே முதல்வரும் தானும் வருவதாகச் சொன்னார். அதன்படிதான் தற்போது இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது.


கட்சி பணி என்பது மிகமிக முக்கியமானது. துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே 10 அமைச்சர்களாவது பதவி விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே சொன்னேன். ஆனால், யாரும் அதற்கு முன் வரவில்லை. ஏற்கனவே நடந்த பொதுக்குழு கூட்டத்தில்  இயற்றிய தீர்மானத்தின்படி வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழுவின் ஆலோசனையின்படியே கட்சியும் ஆட்சியும் நடைபெற வேண்டும். கட்சியில் நாங்கள் எல்லோரும் மீண்டும் இணைந்தபோது இதைத்தானே முடிவாக எடுத்தோம். ஆனால், அதை ஏன் செயல்படுத்தவில்லை?” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்காக துணை முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் என்று ஒரு ஆண்டுகளுக்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தற்போதும் அதை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பதன் மூலம் கட்சி முழுமையாக தன் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், கட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கியிருக்கிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுவது கவனம் பெற்றுள்ளது.

click me!