
வேலூர் மாநகராட்சி 56 வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் துளசி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய 4 வது மண்டல அலுவலகத்துக்கு இன்று சென்றுள்ளார். அப்போது வேட்பாளருடன், முன்மொழிய ஒருவர் என அதிகபட்சம் 3 பேர் வரை மட்டுமே அனுமதி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேலூர் மாவட்ட துணைத்தலைவர் உள்ளிட்ட சிலர் வெளியில் நின்றுள்ளனர்.
ஆனால் திமுக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் 3 வேட்பாளர் உடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் கூட்டமாக வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களை மண்டல அலுவலகத்தில் எதுவும் சொல்லாமலும் தடுத்து நிறுத்தாமலும் அனைவரையும் உள்ளே அனுமதித்தாக தெரிகிறது.
இதுக்குறித்து அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைத் தலைவர் சங்கர் கேட்ட போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே திமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி சங்கரை எம்.எல்.ஏ- வே எதிர்த்து பேசி பிரச்சனை செய்கிறீயா..? என்று கேட்டு அடித்து உதைத்துள்ளனர். திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காயமடைந்த மாவட்ட துணை தலைவர் சங்கர், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் காவல்நிலையத்தில், தாக்குதலில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டமாக வந்த அவர்களை மட்டும் ஏன் அனுமதித்தீர்கள் என்று எம்.எல்.ஏ தரப்பிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சி சேர்ந்த நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில், தருமபுரியில் நாம் கட்சி சார்பில் முஸ்லிம் கைதிகள் மற்றும் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளிகளான 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பொதுக்கூட்டத்தில் , மேடையில் பேசிக்கொண்டிருந்த அந்த கட்சி நிர்வாகி ஒருவரை ஆளும் திமுக குறித்து கடும் விமர்சனம் செய்ததாக மேடையேறி திமுக கட்சியினர் தாக்கினர். மேலும் நாற்காலிகளை மேடையிலிருந்தவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.அப்போது இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியது. மேலும் பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் திமுகவுடன் நெருங்கிய கூட்டணியில் இருக்கும் விசிக வும் திமுகவினர் வன்முறை தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நாம் கட்சியினர் மீது திமுக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி பா.ஜ.,வின் கொள்கைகளுடன் செயல்படுவதாக தி.மு.க., தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்மையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.,வினரை செருப்பால் அடிப்பேன் என சீமான் மேடையில் செருப்பை தூக்கிக் காட்டினார். இச்செயல் தி.மு.க., நிர்வாகிகளை கொந்தளிக்கச் செய்தது. சமூக ஊடகங்களில் சீமானை ஆபாசமாக திட்டித் தீர்த்தனர். மேலும் இனி எங்கெல்லாம் சீமான் கூட்டம் போடுகிறாரோ அங்கெல்லாம் செருப்பு வீசப்படும் என சிலர் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.