கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கக் கூடாது !! அரசு திட்டத்துக்கு ஆப்பு வைத்த ஐகோர்ட் !!

By Selvanayagam PFirst Published Nov 23, 2019, 8:00 AM IST
Highlights

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்குவது தொடர்பாக கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த  உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக் கும் ஏழைகளின் நலன் கருதி பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி தமிழக வருவாய் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டு உள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சேபனையும் எனக்கு இல்லை.

அதேநேரம் அந்த அரசாணையில் கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கும் இதுபோல் இலவச பட்டா வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு கோவில் நிலத்தை ஏழைகளுக்கு வழங்க தமிழக வருவாய் துறைக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால், கோவில் சொத்துகளை பராமரிக்கும் அதிகாரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர். இந்நிலையில் கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் வரன்முறை செய்தாலோ அல்லது அந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் புனிதப்படுத்தினாலோ அது கண்டிப்பாக கோவில் சொத்துகளை எல்லாம் சுத்தமாக இல்லாமல் ஆக்கிவிடும். கோவிலுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் அரசின் இந்த செயல், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கோவில் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

click me!