“தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை" – திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை

Asianet News Tamil  
Published : Jan 02, 2017, 10:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
“தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை" – திருநாவுக்கரசர் பரபரப்பு அறிக்கை

சுருக்கம்

மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு குறித்து தவறாக புரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் சிலர், நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னணியில் தான் கடந்த 11–7–2011–ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சி பொருளாக பயன்படுத்த கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 7–5–2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசின் அறிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்தது.

இந்தப் பின்னணியில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உண்டானது. இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலில் இருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மத்திய  அரசு இந்த அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு, அமைச்சரவையின் ஒப்புதலையோ, விலங்குகள் நல வாரியத்தையோ கலந்து ஆலோசிக்கவில்லை. இச்சூழலில் இந்த அறிக்கையை எதிர்த்து மத்திய அரசை சார்ந்த விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் தொடுத்த வழக்கில் மத்திய அரசின் அறிக்கையை 11–2–2016ம்தேதி உச்சநீதிமன்றம் தடைசெய்தது.

உச்சநீதிமன்ற ஆணையை மத்திய அரசின் நிர்வாக ரீதியான அறிக்கையின் மூலம் ரத்து செய்துவிட முடியுமா? என்ற அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே, மத்திய அரசு இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வரும் தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கண்டிக்கும் வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், நாளை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு,, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவண்ண கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Chief Minister Vijay: கொண்டாட்டத்தில் தமிழ்நாடு..! ராகுல், முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்..