
ஜெ. மறைவுக்குப் பிறகு அணிகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணியினர் அண்மையில் இணைந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த கூட்டங்களின்போது, அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என்று எடப்பாடி தரப்பினர் தெரிவித்து வந்தனர். அண்மையில் நடந்த அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, இன்று அரியலூரில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
அணிகளாக பிளவு பட்டிருந்த நிலையில் 6 மாத கால இடைவெளிக்குப் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இன்று ஒரே மேடையில் உரையாற்றினர்.
இந்த விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, மறைந்த ஜெயலலிதா வழியில் நடைபெற்று வரும் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேச வாய்ப்பளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா ஆட்சியை உயிரைக் கொடுத்தாவது நிலை நிறுத்துவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.