
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், முதலமைச்சர் பதவிற்கு சசிகலா வர முயன்றதால் ஓ.பி.எஸ் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. சிறைக்கு செல்லும் முன் சசிகலா அவரது உறவினரான டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவிட்டார்.
இதற்கு பிப்ரவரி 28 க்குள் பதிலளிக்குமாறு சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதைதொடர்ந்து சசிகலா சார்பில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் சட்ட விதிகளின் படியே சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என பதில் மனு தாக்கல் செய்தார்.
சசிகலாதான் தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க வேண்டும். அல்லது சசிகலாவால் அங்கீகாரம் செய்யப்பட்டவர் தான் பதிலளிக்க வேண்டும்.
கட்சியின் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதில் அளிக்க முடியும். டி.டி.வி தினகரன் எந்த ஒரு பதவியிலும் இல்லை.
தினகரன் கையெழுத்து கொண்ட பதிலை ஏற்க முடியாது. தினகரனால் தரப்பட்ட பதிலில் தினகரனுக்கான பொறுப்பு விவரங்கள் இடம் பெறவில்லை.
பொதுச்செயலாளர் நியமனம் குறித்த நோட்டீசுக்கு மார்ச் 10 தேதிக்குள் சசிகலாவின் கையெழுத்திட்ட பதிலை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.