
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிச.18ம் தேதி திங்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து பாஜக.,வே முன்னிலை பெற்றிருந்தது. இருப்பினும் இரு கட்சிகளின் முன்னிலை நிலவரமும் ஒன்றுக்கு ஒன்று பின் தள்ளி வந்தது. சிறிது நேரம் பா.ஜ.க,வை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே பாஜக., மீண்டும் முன்னிலை பெறத் துவங்கியது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பெரும்பான்மையைப் பெற 92 இடங்கள் தேவை. காலை 10 மணி நிலவரப் படி, பா.ஜ.க, 99 இடங்களில் முன்னிலையில் இருந்தது. இது கடந்த தேர்தலில் பெற்றதை விட 16 தொகுதிகள் குறைவு. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
குஜராத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்த, குஜராத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கடுமையாகப் பாடு பட்டது பாஜக. எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை பாஜக., கடும் போட்டியைச் சந்தித்தது. காரணம், மோடி குஜராத்தில் இருந்து வந்து பிரதமர் ஆகி விட்டபின், அங்கே மாநிலத்தில் முதல்வராக இருந்தவர்களின் செல்வாக்கு அவ்வளவாக மக்களிடம் எடுபடவில்லை. இருப்பினும் மோடி மேற்கொண்ட தீவிர பிரசாரத்தால், தொடர்ந்து 7 வது முறையாக குஜராத்தில் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப, ராஜ்கோட் தொகுதியில் தற்போதைய முதல்வர் ரூபானி பின்தங்கினார். ஆனால், மெஹ்சானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை பெற்றிருந்தார்.
முன்னதாக, எல்லா கருத்து கணிப்புகளிலும் பாஜக., மிகப் பெரும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. குறைந்தது 118 தொகுதிகள் பாஜக., பெறும் என்றும், 130 பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், பாஜக., ஆட்சிக்குத் தேவையான 91ஐக் கடந்து பெரும்பான்மை பெறும் என்றாலும், அவ்வளவு பெரிய பெரும்பான்மை பெற்று விடாமல், காங்கிரஸுடன் நெருக்கமாக போட்டி போட்டுக் கொண்டுதான் வந்திருக்கிறது.
ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராகத் தேர்வாகியுள்ளார். இந்தத் தேர்தலுக்காக, குஜராத்தில் கோயில்களுக்கெல்லாம் ஏறி இறங்கி, கடவுள் பக்தி மிகுந்த ஓர் ஹிந்துவாக தன்னைக் காட்டிக் கொண்டார். குஜராத்தில் கள நிலவரம் அப்படி இருந்ததால். இதனால் தானோ என்னவோ, காங்கிரஸ் கருத்துக் கணிப்புகளை மீறி, 20 இடங்கள் கூடுதலாக முன்னிலையில் இருந்து வருகிறது.