பாகிஸ்தானுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பகிரங்க எச்சரிக்கை.. தஜிகிஸ்தான் தலைநகரில் தெறிக்கவிட்ட அஜித் தோவால்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2021, 6:38 PM IST
Highlights

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வரும் பயங்கரவாத குழுக்கலான  ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மீது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் வலியுறுத்தியுள்ளார். 
 

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வரும் பயங்கரவாத குழுக்கலான  ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மீது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் வலியுறுத்தியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனப்படும் (எஸ்சிஓ) க்கான தேசிய பாதுகாப்பு தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அஜித் தோவால் ,ஆயுதங்களை கடத்துவதற்கு பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ட்ரோன்கள் மற்றும்  இணையதள தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என வலியுறுத்தியுள்ளார். 

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தேசியத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது,  லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான செயல் திட்டத்தை முன்மொழிந்தார். மேலும் ஆயுத கடத்தல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவது மற்றும் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என வலியுறுத்தினார்.

அனைத்து வடிவங்களிலும் வெளிபடும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியத்தையும், எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு, விரைவாக தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் பெறப்பட்ட  லாபங்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்திய அவர், அங்குள்ள மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் எஸ்சிஓ தொடர்பு குழுவை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது எனவும் அது மேலும் சுறுசுறுப்பாக செயல்பட  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், 2017ஆம் ஆண்டில் இந்தியா எஸ்சிஓ உறுப்பினராக இடம் பெற்றாலும், அது இப்போது எஸ்சிஓவில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பல நூற்றாண்டுகளாக ஆன்மீகம், கலாச்சாரம், தத்துவம் என உறவுகளை மேம்படுத்தி வருவதாக கூறினார். எஸ்சிஓ தேசிய பாதுகாப்பு தலைவர்களின் சந்திப்பின் ஒருபகுதியாக அஜித் தோவால், ரஷ்ய  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் புட்ருஷேவுடன்  நீண்ட சந்திப்பை நடத்தினார். இருதரப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தின் சமூக முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் விரிவாக விவாதித்தனர். இவ்விரு தலைவர்களும் ஆப்கனிஸ்தான் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உருவாகிவரும் நிலைமைகள் குறித்தும் தங்கள் கருத்தை பரிமாறிக்கொண்டனர். 

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட எஸ்சிஓ 8 உறுப்பினர்களை கொண்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டமைப்பாகும், இது மிகப்பெரிய நாடுகடந்த சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இடம்பெற்றன. ரஷ்யா, சீனா மற்றும் 4 மத்திய ஆசிய நாடுகளான கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் 2001இல் ஷாங்காயில் நடந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!