நாமக்கல் நகராட்சி 16வது வார்பில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. யாருக்கு ஓட்டு கேட்பது என்ற குழப்பம் இரண்டு கட்சியினரிடையே எழுந்து இருக்கிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு இரு வார்டுகள், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 16வது வார்டில் போட்டியிட திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.டி.சரவணன், கட்சியின் மாவட்ட நிர்வாகத்திடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.
undefined
எனினும், அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த டி.டி.சரவணன் அந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட முதல் ஆளாக களம் இறங்கினார். அந்த வார்டில் திமுக சாா்பில் தொடர்ச்சியாக டி.டி.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால், சுயேச்சையாக களம் இறங்கிய சரவணனே வெற்றி பெறுவார் என்ற பேச்சு பரவலாக அடிபட்டு வந்தது.
இதையடுத்து, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிடும் சரவணனுக்கு திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்சி மூலம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதனால் நாமக்கல் நகராட்சி 16வது வார்டில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் வார்டு உறுப்பினர் கே.எம்.ஷேக் நவீத்தும் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. யாருக்கு ஓட்டு கேட்பது என்ற குழப்பம் இரண்டு கட்சியினரிடையே எழுந்து இருக்கிறது.