"தினகரன் என்கிற கிரிமினல்" பின்னணி என்ன தெரியுமா? நாசம் செய்த நமது அம்மா தலையங்கம்!! விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் அதிமுக

By sathish kFirst Published Jun 27, 2019, 1:08 PM IST
Highlights

மக்கள் திலகமும், மகராசி அம்மாவும் மடி வளர்த்த கழகத்தை ஒருநாளும் மாஃபியாக்களால் வழிநடத்த முடியாது. அவர்கள் வழி நடத்தவும் கூடாது என்ற தெளிவான முடிவை எடுத்து திசை மாறிப் போன பறவைகள் அனைத்தும் கழகம் என்கிற தாய்க் கூடு திரும்ப தொடங்கிவிட்டனர் என நமதுஅம்மா கட்டுரையில் அண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல..   தலைப்பில் வெளியாகியுள்ளது.

மக்கள் திலகமும், மகராசி அம்மாவும் மடி வளர்த்த கழகத்தை ஒருநாளும் மாஃபியாக்களால் வழிநடத்த முடியாது. அவர்கள் வழி நடத்தவும் கூடாது என்ற தெளிவான முடிவை எடுத்து திசை மாறிப் போன பறவைகள் அனைத்தும் கழகம் என்கிற தாய்க் கூடு திரும்ப தொடங்கிவிட்டனர் என நமதுஅம்மா கட்டுரையில் அண்ணன் யோக்கியத.. இன்னுமா புரியல..   தலைப்பில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் வெளியான தலையங்கத்தில் பகீர் பல தகவல்களை தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டுள்ளனர்; தினகரன் தீவிரவாக இயக்கத் தலைவர் போலவே நடந்து கொள்கிறார். இப்படி சொல்லியிருப்பவர் அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்கதமிழ்ச் செல்வன்தான். அது சரி உடனிருப்பவர்களுக்கு தானே தினகரனின் உண்மை சொரூபம் புரியும். ஆட்சியின் அதிகாரங்களை ஒட்டுண்ணி போல உறிஞ்தி கொழுத்து லண்டனிலே ஆயிரம் கோடிக்கு ஓட்டல் வாங்கி விட்டு அதற்காக அப்போதைய திமுக ஆட்சி வழக்கு தொடுத்து விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவை லண்டனுக்கே அனுப்பி வைத்து மொத்த விவரங்களையும் திரட்டி வந்தது.

ஆனால் திமுகவோடு திரைமறைவு பேரம் நடத்தி தன் மீதான வழக்கை திரும்ப பெற வைத்து விட்டு ஆனாலும் திருந்தாமல் அன்னிய செலாவணி மோசடிகளை அன்றாட நடவடிக்கைகளாக்கிக் கொண்டவர் ஃபெரா வழக்குகளுக்கு தேடப்படும் குற்றவாளி ஆனார் தினகரன். அவரது தம்பி சுதாகரனின் திருமணத்தில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு அமலாக்கப்பிரிவுக்கு பயந்து ஆந்திரா பக்கமாக ஒளிந்து திரிந்தார். பிறகு ஒருநாள் நான் இந்திய குடிமகனே அல்ல. இந்தியாவின் நிதி ஒழுக்க சட்டங்கள் எனக்கு பொருந்தாது, நான் சிங்கப்பூரின் பிரஜை என்றெல்லாம் சட்டத்தையும் ஏமாற்ற சகல வித்தைகளையும் கையாண்டு பார்த்தார்.

ஆனாலும் அவையெல்லாம் முழுமையாக கைகொடுக்காத நிலையில் சென்னை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை என்றெல்லாம் அன்னிய செல்வாணி மோசடி வழக்குகளுக்காக சிறைக்கு போய் வந்ததோடு இன்றும் 28 கோடி ருபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவ்வழக்கு மேல்முறையீட்டில் இருக்கும் நிலையில் தினகரன் பிணையில் இருக்கும் குற்றவாளி என்பதுதான் உண்மை. 

ஆனாலும் இக்காலங்களுக்கு இடையே கள்ளை பால் என்று நம்பிய நம் கருணைத் தாயின் வெள்ளை உள்ளத்தால் பெரியகுளம் தொகுதிக்கு எம்பியாக்கப்பட்டார். ஆனால் அடுத்த வந்த தேர்தலில் அதே தொகுதியில் தோற்று போன தினகரனை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்தார் நம் மகராசி அம்மா. ஆனாலும் திமுகவுடனான துரோக தொடர்புகளும், அம்மாவுக்கே எதிராக தினகரன் மேற்கொண்ட வஞ்சக நடவடிக்கைகளும் ஒரு நாள் தெளிவாகவே புரிந்து விட்ட நிலையில் உக்கிரமாய் எச்சரிக்கப்பட்டு தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே தலைகாட்டக் கூடாது என்கிற உத்தரவின் பேரில் பாண்டிச்சேரி பக்கமாக பத்திவிடப்பட்டார் மேற்படு ஃபெரா பேர் வழி தினகரன். 

அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு காலம் பதுங்கு குழி வாழ்க்கை ஆனாலும் எப்போது அம்மா காலியாவார். திண்ணை கைகூடும் என்று காத்து கிடந்த தினகரன் நம் கருணைத் தாயின் மறைவுக்கு பிறகு சிறைக்கு புறப்பட்ட சின்னாத்தாவால் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் என்று அறிவிக்கப்பட்டார். உடனடியாக ஔரங்கசீப்பாக தன்னை நினைத்துக் கொண்டு அரபு நாட்டு அரசியலை முன்னெடுத்த அதிமுகவின் மொத்தமும் தன்னிடமும் தன் மனைவி,மச்சானின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்துவிட வேண்டும் என்று அவசர கதியில் அதிகார வெறியில் அலைந்தார். முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை மீட்பதாக சொல்லி இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முனைந்து கையும், களவுமாக மாட்டி டெல்லி திகார் சிறைக்கும் போய் வந்தார். 

வந்த வேகத்தில் தன்னைத்தானே ஆர் கே நகருக்கு வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்டார். ஏழை, எளிய மக்களிடம் ஓட்ட போட்டு வந்து பத்தாயிரம் பெற்றுக் கொள் என்று தனது வெகுநாள் அனுபவமான ஹவாலாவோடு தேர்தல் அரசியலை கலந்து ஒட்டுமொத்த வாக்காளர்களையும் ஏமாற்றி ஆர் கே நகரில் வெற்றி பெற்றார். ஆனாலும் தந்திரத்தாலே பிழைப்பவன் ஒரு நாள் அந்திரத்தில் நிற்பான் என்பது போல், தினகரன் என்கிற கிரிமினல் பின்னணி அரசியல்வாதிக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை ஒட்டு மொத்த தமிழினமும் தங்களது வாக்களிப்பு மூலம் உரக்கச் சொன்னது. 

கோடான கோடிகளை வாரி இரைத்து ஊடகங்கள் மூலம் தினகரன் உருவாக்கிய மாயை ஊர்ஜனங்களால் சுக்கு நூறாகக்கப்பட்டது. திமுகவோடு திரைமறைவு பேரம் நடத்திக் கொண்டு அதிமுகவை பலவீனப்படுத்தவும், அதன் மூலம் முக ஸ்டாலினை எதிர்காலத்தில் முதல்வராகவும் தினகரன் மேற்கொண்ட பப்பீஸ் ஓட்டல் ஒப்பந்தங்கள் பலவும் அமமுக இரண்டாம் நிலை தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை தெரியலாயின. 

அதனைத் தொடர்ந்து மக்கள் திலகமும், மகராசி அம்மாவும் மடி வளர்த்த கழகத்தை ஒருநாளும் மாஃபியாக்களால் வழிநடத்த முடியாது. அவர்கள் வழி நடத்தவும் கூடாது என்ற தெளிவான முடிவை எடுத்து திசை மாறிப் போன பறவைகள் அனைத்தும் கழகம் என்கிற தாய்க் கூடு திரும்ப தொடங்கிவிட்டனர். இப்போது தினகரன் குடும்பத்தால் நடத்தப்படும் ஐடி நிறுவனம் மூலம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் மட்டுமே உயிர் வாழ்கிற கடுகளவு இயக்கமாகி விட்டது அமமுக. 

ஆனாலும் இத்தனை விவரங்களும் இப்போது தான் புரிந்தவராக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் தங்கதமிழ்ச் செல்வன், தினகரன் ஒரு தீவிரவாத தலைவர் போல் செயல்படுகிறார் என்றும் காலம் கடந்து பெற்ற ஞானம் போல பேசுவது வேடிக்கையாகவும் தான் இருக்கிறது என இவ்வாறு அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

click me!