பாஜக தமிழக தலைவர் பதவி? ரேஸில் முந்திய நயினார் நாகேந்திரன்! புத்தாண்டில் வெளியாகிறது அறிவிப்பு!

By Selva KathirFirst Published Dec 11, 2019, 11:10 AM IST
Highlights

பாஜக தமிழ் மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை அமித் ஷா – ஜே.பி நட்டா சேர்ந்து தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராகி 3 மாதங்கள் கடந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவி தொடர்ந்து காலியாகவே உள்ளது. ஏற்கனவே தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் அந்த பதவிக்கு வர பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் பாஜக மேலிடமும் கூட இளைஞராகவும், செயல் வீரராகவும் இருக்க கூடிய ஒரு நபரை தேடி வந்தது.

அந்த வகையில் தஞ்சை கருப்பு முருகானந்தம், டெல்லியில் உள்ள கோவையை சேர்ந்த ஒரு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகிய மூன்று பேருக்கும் தான் தலைவர் பதவிக்கு கடும் போட்டி இருந்தது. இதில் அதிக நெகடிவிட்டி பெயர் காரணமாக கருப்பு முருகானந்தம் பெயர் முதலிலேயே நீக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதன் பிறகு நயினார் நாகேந்திரன் – ஏ.பி முருகானந்தம் இடையே தான் தலைவர் பதவிக்கு போட்டி காணப்பட்டது. ஆனால் ஏபி முருகானந்தம் திடீரென தமிழக தலைவருக்கான போட்டியில் இருந்து தானாக விலகிவிட்டதாக சொல்கிறார்கள்.

தற்போது டெல்லியில் பாஜகவின் மேல்மட்ட தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஏபி முருகானந்தம். மோடியின் பிரச்சார குழுவில் இவருக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஹரியானா தேர்தலில் பின்னடைவு, மராட்டிய தேர்தலில் பேரிடி போன்ற சமாச்சாரங்களால் மோடி தனது டீமை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளாராம். இதனால் ஏபி முருகானந்தம் போன்ற அனுபவஸ்தர்களை அவர் இழக்க தயாராக இல்லை என்கிறார்கள்.

இதனால் நயினார் நாகேந்திரனுக்கு அதிர்ஷ்டம் அடிக்க அவர் தமிழக பாஜக தலைவராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த ஜே.பி நட்டா நயினார் நாகேந்திரன் குறித்து நல்ல ரிப்போர்ட்டை அமித் ஷாவிடம் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவில் இருந்த போது நயினார் நாகேந்திரன் தேர்தல் ஸ்பெசலிஸ்ட் என்று பெயர் எடுத்துள்ளதால் அவருக்கு அமித் ஷாவும் ஓகே சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள்.

இதனால் புத்தாண்டியில் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய நிர்வாகிகளை பாஜக மேலிடம் அறிவிக்க உள்ளது. அப்போது தமிழக தலைவராக நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!